Friday, May 22, 2015

முதலமைச்சராகும் ஜெயலலிதா கடந்து வந்த பாதை!!

Friday, May 22, 2015
முதலமைச்சர் பதவியிலிருந்து பன்னீர் செல்வம் விலகியிருக்கும் நிலையில் ஆட்சி அமைக்க ஜெயலலிதாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இந்திய அரசியலில் முத்திரை பதித்த பெண்களில் ஒருவரான ஜெயலலிதா, கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலம் மைசூரில் ஜெயராம் - சந்தியா தம்பதியருக்கு 1948 பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார் ஜெயலலிதா. அவரது மூதாதையர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்த ஜெயலிலதா, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட அன்றைய முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

1982ம் ஆண்டு அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்ட அவர், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக உயர்ந்தார். 1984-ம் ஆண்டு ராஜ்யசபாவில் முதன் முதலில் அவர் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பேசும் திறன்கொண்டவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தமிழக அரசியலில் கருணாநிதிக்கு மாற்றான அரசியல் சக்தியாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்.

1991ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்து தமிழக முதலமைச்சராக முதன் முறையாக பொறுப்பேற்றார். ஆனாலும், பல்வேறு புகார்களால் அடுத்து வந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. இதையடுத்து திமுகவின் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்.

2002-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார். 2006-ல் ஆட்சியை இழந்தாலும், மக்களின் நம்பிக்கையை சம்பாதித்து 2011ம் ஆண்டு 3-வது முறையாக அவர் முதலமைச்சரானார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததால், முதலமைச்சர் பதவியை அவர் இழந்தார். தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த ஜெயலலிதா, கடந்த 11ம் தேதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
 
தமிழக முதலமைச்சராக இருந்த போது பெண்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்த ஜெயலலிதா, தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் காவல் நிலையம் போன்ற திட்டங்களை செயல்படுத்தினார். விளையாட்டுத்துறையின் மீது அவருக்கு தனிக் கவனம் உண்டு. அரசியல் பங்களிப்புக்காக பல்வேறு பல்கலைக் கழகங்கள் ஜெயலலிதாவுக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.

No comments:

Post a Comment