Saturday, January 17, 2015

வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்கள் நாட்டின் சில பகுதிகளுக்கு பயணம் செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

Saturday, January 17, 2015      
இலங்கை::வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்கள் நாட்டின் சில பகுதிகளுக்கு பயணம் செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று காலை நடைபெற்ற முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளரும், பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
நாட்டில் தற்போது யுத்த நிலை முழுமையாக நீங்கி மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழும் சகஜ நிலை தோன்றியுள்ளமையை கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததார்.
 
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு கீழ் குறிப்பிடப்படும் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்ந்தும் தடை செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அதன் விபரங்கள் வருமாறு,
 
வடமாகாணம்
1) இராணுவ ஆயுதம்
2) இராணுவ ஆயுதம், வெடிபொருட்கள்
3) வெடி மருந்துகள்
4) பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் சீருடைகளுக்குச் சமமான புடவைத் துணிகள்
5) தொலை நோக்கிகள் (டெலஸ்கோப்)
கிழக்கு மாகாணம்
இராணுவ ஆயுதம், வெடிபொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் ஆகும்.
 
மேற்குறிப்பிடப்பட்ட பொருட்களைத் தவிர்ந்த ஏனைய பொருட்கள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு தங்கு தடையின்றி எடுத்துச் செல்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளோ தடைகளோ கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டம் நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டம் இதுவாகும் என்று பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

புதிதாக கடமைகளை பொறுப் பேற்றுக்கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யு.டி. பஸ்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment