Tuesday, December 30, 2014

ரிஷாத் பதியுதீனின் கபட நாடகம் – அம்பலப்படுத்துகிறார் என்.எ ம்.ஷகீர்! ரிஷாட் காக்காவும், சங்கரி அண்ணாவும் கரணமடிப்பு!

 Tuesday, December 30, 2014      
இலங்கை::ரிஷாத் பதியுதீன் கட்சித் தாவல் கேடு கெட்ட ஒரு செயல் , பச்சை நம்பிக்கைத் துரோகம் எனவும்  இந்த நாட்டிலே கூட இருந்து குழி பறிப்பவர்கள் மற்றும் நயவஞ்சகமாக செயற்படுபவர்கள் இன்று அதிகரித்துள்ளார்கள் எனவும் தேசிய சிறு கைத்தொழில் ஊக்கிவிப்பு அதிகார சபையின் தலைவரும், பணிப்பாளர் நாயகமும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சிரேஸ்ட பிரதி தலைவரும், பிரபல சட்டத்தரணியுமான என்.எ ம்.ஷகீர் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளாா்.
 
யாழ் எவ்.எம் வானொலி நிலையத்தில் நடைபெற்ற மாலை வசந்தம் நிகழ்ச்சியில் கொழும்பில் இருந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எவ்வாறு கபட நாடகம் ஆடி தங்களை எல்லாம் மைத்திரி பால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க முயற்சித்தார் என்பது தொடர்பில்  நீண்டதொரு விளக்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
 
இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் நேற்று அவசரமாக  கூட்டத்தைக் கூட்டி அந்தக் கூட்டத்திலே கட்சியின் பங்காளர்களை, கட்சியின் முக்கியத்தவர்கள் எல்லோரையும் அழைத்து இன்று நாங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும் அந்த முடிவு எந்த வகையில் அமைய வேண்டும் என்று உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்ட போது 75 வீதமானவர்கள் நீங்கள் எந்த முடிவை எடுக்கிறீர்களோ நாங்கள் அந்த முடிவை ஏற்றுக் கொள்கிறாம் என்று கூறினார்கள்.
 
அப்பொழுது என்னுடைய சந்தர்ப்பம் வந்த பொழுது நான் கூறினேன் நாம் இன்றும் அரசுடன் தான் இருந்து கொண்டிருக்கிறாம். அரசு தேர்தலை அறிவித்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. ஜனாதிபதியை சந்தித்த போது (அலரி மாளிகையில் சென்ற டிசம்பர்  7ம் திகதி இவ் சந்திப்பு நடை பெற்றது) எங்களுடைய பிரச்சினைகளைப் பற்றிக் கூறி அதற்கான ஒரு ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜனாதிபதியோடு சாப்பிட்டுவிட்டு அவருக்கு வாக்களிப்பதாகவும் கூறிவிட்டு வந்தோம். அதனை நம்பிய ஜனாதிபதியும் ஏனைய ஊடகங்களும்  ரிஷாத் பதியுதீனுடைய கட்சியும், ரிஷாத் பதியுதீனும் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் சொன்னார் நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்ற கதையை அவிழ்த்து விட்டார்.
 
அது எனக்கு தர்ம சங்கடமான  நிலையை ஏற்படுத்தியிருந்தது. இருந்தாலும் கூட அவர் அரசிலிருந்து விலகியதாகவோ அல்லது ஆட்சியில் இருந்து விலகியதாகவோ இருக்கவில்லை. அவர்கள் அமைச்சிலிருந்து செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தார்கள். எனவே அவ்வாறான நடவடிக்கைகளை பார்த்த போது நாங்கள் அவருடன் சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய தேவைப்பாடு இருக்கவில்லை. ஆனால் இன்று நடந்தது என்னவென்றால்? எல்லோரையும் கூட்டிவிட்டு நீங்கள் எடுக்கின்ற முடிவை எடுங்கள் என்று சொன்ன போது என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
நான் அக்கட்சியின் ஆரம்பகால தலைவர். நாங்கள் முதல் எமது கட்சியை ஆரம்பிக்கும் போது அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்று ஆரம்பித்தோம். பின்னர் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்ற பெயரை மாற்றி அகில இலங்கை மக்கள் காங்கிஸ் என்று செயற்பட தொடங்கினோம். ஆரம்பத்தில் ரிஷாத் பதியுதீன், அமீர் அலி (அலி சிகிப்த்டீன் அமீர்) போன்றவர்கள் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை விட்டு அரசுடன் இணைந்ததனால் இக் கட்சியில் சட்டரீதியாக அங்கம் வகிக்க முடியவில்லை.
 
அப்பொழுது அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசின் தலைவராக நான் இருந்து வந்தேன். வை.எல்.எப் ஹமீட் செயலாளராக இருந்து வந்தார்.  ரிஷாத் பதியுதீன் தெரிவு செய்யப்பட்டு அமைச்சராக வந்த பின்னர் அவரிடம் தலைமைப் பதவியை கொடுத்துவிட்டு நான் ஒதுங்கினேன். பின்னர் அவர்களை என்னை சிரேஸ்ட பிரதி தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். இக் கட்சியில் ஏழு பேர்கொன்ட ஆட்சி மன்றக் குழு தான் எல்லா முடிவுகளை எடுக்கும் ஆட்சி மன்ற குழுவிபரம்
வருமாறு.
 
• கட்சியின் தலைவர் – ரிஷாத் பதியுதீன்
• சிரேஸ்ட பிரதித் தலைவர் – என். எம். ஷகிர்
• கட்சித் தவிசாளர் – அமீர் அலி
• செயலாளர் – வை.எல்.எப் கமீட்
• கொள்கைப் பரப்பு செயலாளர் – குடைஸ் பாறூக் (ஏற்கனவே அவர் எதிர்கட்சியில்இணைந்துள்ளார்)
• தேசிய இணைப்பாளர் – ஹிஸ்புல்லா
• பிரதித் தலைவர் நஐிப் அப்துல் மஐிட் (ஏற்கனவே கட்சியை விட்டு விலகி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக உள்ளார்)
 
ஏற்கனவே கட்சியில் இருந்து குடைஸ் பாறூக்கும், நஐிப் அப்துல் மஐிட் விலகி விட்டார்கள். ஜனாதிபதி கிழக்கு மாகணத்திற்க்கு பிரச்சாரம் செய்யச் சென்ற போது நாங்கள் அவருக்காக பாடுபடுவோம் என்று கூறியதிலிருந்து அவர் இதய சுத்தியோடு ஜனாதிபதியின் வெற்றிக்காக மட்டக்களப்பு மாவட்டம், காத்தான் குடியில் தனது பணிகளை முன்னெடுத்தார்.
 
அதற்கிடையிலே கட்சிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் படி ஒரு தேசிய பட்டியலில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும். என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அது சற்று தாமதமானது ஒரு சில பிரச்சினைகள் அரசிலும் இருந்தது. தேர்தலுக்கு முன்பே செய்ய வேண்டும் என்பதற்காக தேசிய பட்டியலில் இருந்து எ.எச்.எம்.அஸ்வர் அவர்களை இராஜினாமா செய்ய வைத்து (சென்ற 12ம் திகதி வழங்கப்பட்டது) அமீர் அலிக்கு அப் பதவி வழங்கப்பட்டது.
 
இதற்க்கு முன்னர் இப் பதவியை ஏற்க வேண்டுமா? அல்லது ஏற்க்கக் கூடாதா? ஏன்று மக்களின் கருத்தை கேட்டார். ஆப்போது மக்கள் அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் பதவி தந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்கள். பின்னர் அவர் அப்பதவியினை ஏற்றார். அப்போது அவர்கள் அரசாங்கத்துக்கு நம்பிக்கையாக செயற்பட்டார்கள். இன்று தீடீர் என்று ஒரு கூட்டத்தை வெள்ளவத்தை மறையின் கிறான்ட் என்ற வரவேற்பு மண்டபத்தில் பகல் உணவுடன்  நடாத்தினார்கள்.
அப்போது நான் கூறினேன் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவழிப்பதற்க்கு முஸ்லீம்களுக்கு ஏதும் தேவைப்பாடு இருப்பாதாக தெரியவில்லை. பொது பல சேனா பற்றி இன்று பேசுகிறார்கள். சிங்கள பௌத்த பிக்குமார் அமைப்பை கட்டுப்படுத்துவதில் தவறு இழைத்திருந்தார்கள். இச் செயல் எம்மை பாதித்தாலும் பாராளுமன்றத்தில் எமது எதிர்ப்பை தெரிவிக்க முடிந்தது. அமைச்சரவையில் டிலான் பெரேரா,  நிமால் சிறீபால டி சில்வா போன்றோர் ஆவேசமாக குரல் கொடுத்தார்கள. ஆனால் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கவில்லை.
 
மேலும் இன்று பொலநறுவையில் 40,000 முஸ்லீம் குடும்பங்கள் இருக்கின்றனர். முஸ்லீம் மக்களின் முன்னேற்றம், கல்வி செயற்பாடுகளில் என்ன முயற்சிகளை மைத்திரிபால சிறிசேன செய்தார்.
பொலநறுவையில் 400க்கு மேற்ப்பட்ட அரிசி ஆலைகள் இருக்கின்றன. இவற்றில் 300 இற்கு மேற்ப்பட்டவை முஸ்லீம் வர்த்தகர்களுக்கு உரியவை. கடந்த நான்கு,  ஐந்து வருடங்களாக மைத்திரிபால சிறிசேனவின் சகோதர் ‘அனகொண்டா’ பாம்பு போன்று இவர்களின் அரிசி ஆலைகளை மூடிவித்தார். வங்கிகள் வழங்கும் கடனுதவிகளை தடுத்து நிறுத்தியும், அவர்களுக்கு வரும் நெல் மூட்டைகளையும் தடுத்து நிறுத்தி அவர்களது பொருளாதாரத்தை சீரற்ற நிலைக்கு கொண்டு வந்தாா்.
 
1000பாடசாலைகள், இசுறு பாடசாலை திட்டம் வந்த போது ஒரு உதவி கூட மைத்திரிபால சிறிசேன செய்யவில்லை. முதலில் அவருடன் பேச வேண்டும். அதன் பின்னரே முடிவு எடுக்க முடியும் என்றேன். மைத்திரிபால சிறிசேன இன ரீதியாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனையும் சொல்லவில்லை இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட குழம்பியுள்ளது. அவரின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழில் கூட வெளியாகவில்லை. இன்னும் இரு வாரகாலம் மட்டுமே தேர்தலுக்கு இருக்கும் நிலையில் அரசாங்கத்தில் குறை கூறிகொண்டு வெறு கட்சியொன்றில் சென்று இனணவது ஒரு கட்சிக்கு சிறந்த பண்பாக அமையாது. இக் கூட்டத்தில் ஆட்சி மன்றக் குழுவின் நான்கு பேர் மட்டுமே இருந்தோம்.
நாம் வேறு ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தால் அமீர் அலி தனது பதவியை துறக்க வேண்டும் அது தான் தார்மீகம். நான் கேட்டேன் நீங்கள் ஜனாதிபதியோடு பேசும் போது பல நிபந்தனைகளை முன்வைத்தீர்கள். ஆனால் மைத்திரியிடம் இவர்களிடம் பேசும் போது அவர்கள் என்ன தருவதாக கூறினார்கள்?என்று நான் கேட்டேன். அவர் சொன்னார் இன்னும் நாங்கள் பேசவில்லை என்றார்.
 
அப்படியென்றால் நாம் அவரிடம் சென்று முதலில் பேச வேண்டும். அவர்களது கருத்துக்களின் பிற்பாடு நாம் முடிவு எடுக்கலாம் என்றேன். அதற்கு றிசாட் சரி நாம்  ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்க்கு சென்று அங்கே பேசுவோம் அதன் பிற்பாடு இதனைப்பற்றி ஒரு முடிவு எடுப்போம் என்று கூறினார்.
 
ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்க்கு பேசுவதற்காக செல்லும் போது என்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன் அப்போது நான் எதிர்பார்க்க முடியாத நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு றிசாட் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்கனவே எமக்கு தெரியாமல் ஒழுங்கு செய்து இருக்க வேண்டும் அங்கு முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி பிரதித்தலைவர் ரவி கருணாநாயக்கா ஆகியோர் கூட இருந்தார்கள். அக் கூட்டத்திற்க்குள் நான் செல்லும் பொது அப்போது ஊடகங்களுக்கு ரிஷாத் பதியுதீன் சொன்னார்
 
நாங்கள் அரசாங்கத்தை விட்டு விலகி மைத்திரி பால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கப் போகிறோம். என்னை முன் ஆசனத்திலே அமரச் சொன்னார்கள் நான் அமரவில்லை. பின் ஆசனத்தில் இருந்துவிட்டு மெதுவாக வெளியே வந்துவிட்டேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. நான் ஒன்றையொன்றை மட்டும் மன வருத்தத்துடன் கூறுகிறேன்.
 
இவர்கள் நம்பிக்கை துரோகிகளாக இருக்கிறார்கள். முஸ்லீம்களது பிரச்சினைகளை அரசிடம் கூறி அவை தீர்க்கப்படவில்லை என்றால் எப்போதே வெளியேறி விட வேண்டியிருக்க வேண்டும். இவ்வளவு நாட்களும் அவர்களுடன் பேசி பழகிவிட்டு இவ்வாறு ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவது ஒரு அரசியல்வாதிக்கு உகந்தது அல்ல. எமது கட்சியின் ஆட்சி மன்றத்தினரை
 
கலந்தலோசிக்காமல் முடிவெடுத்தார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றுதெரிவித்தாா்.
 
ரிஷாட் காக்காவும், சங்கரி அண்ணாவும் கரணமடிப்பு!
 
இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகதெரிவித்து இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment