Tuesday, December 9, 2014

புலிகள், டயஸ் போராக்களின் கனவை நனவாக்க முயலும் செயற்பாடுகள் வெற்றியளிக்காது:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, December 09, 2014
இலங்கை::
புலிகளினதும் டயஸ்போரா வினதும் வைராக்கியத்தை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு இங்குள்ளோர் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுவதாகவும் அதற்கு மக்கள் துணைபோய் விடக் கூடாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
 
கொழும்பு நாரஹேன்பிட்டி விவசாய விளையாட்டரங்கில் நாடளாவிய பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
 
நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் எமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டே நாம் செயற்பட்டு வருகின்றௌம். இந்த வேளையில் எத்தகைய சூழ்ச்சிகளுக்கும் மக்கள் துணைபோகாமல் எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு நான் நாட்டின் அனைத்து மக்களையும் கேட்டுக் கொள்கின்றேன். நாம் அனைவரும் இணைந்து இந்த நாட்டை அமைதியும் அபிவிருத்தியும் நிறைந்த நாடாகக் கட்டியெழுப்புவோம். அதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
 
எமது எதிர்கால சந்ததிக்கு சிறப்பான நாட்டினைப் பெற்றுக் கொடுப்பது என்னுடையதும் உங்களுடையதும் பொறுப்பாகும். அதற்காக எந்த வேளையிலும் எம்மால் மேற்கொள்ளக் கூடிய அத்தனையும் நிறைவேற்ற நாம் தயாராகவே உள்ளோம். உங்களின் எதிர்பார்ப்பு இதில் மிக அவசியமாகும். பாதுகாப்பான தேசமொன்றை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்த்துச் செயற்படுவோம்.
 
மக்கள் பயம் அச்சத்துடன் நாட்களைக் கடத்திய காலத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். இப்போது அனைத்து மக்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழவும் நாட்டின் எந்த மூலைக்கும் பயணிக்கும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை, வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் குறைப்பது பற்றி கவனமெடுக்கப்பட்டுள்ளது. டீசலின் விலை தற்போது பத்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக சகல பொருட்களினதும் விலைகளைக் குறைப்பதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
பாதாளக் குழுக்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளதால் மக்களுக்கு இப்போது பாதுகாப்பும் கப்பம் வழங்குவதிலிருந்து மீட்பும் கிடைத்துள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு கப்பக் காரர்களிடமிருந்து மீட்டுள்ளோம்.
 
இன்று அபிவிருத்தியிலும் பாதுகாப்பிலும் நாடு கட்டியெழுப்பப்பட்டு நமது எதிர்கால சந்ததிக்காக சிறந்த நாடு உருவாக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 7.8 சதவீதமாக உள்ள போதும் வடக்கின் அபிவிருத்தி வேகம் 22 வீதமாகவுள்ளது.
 
இந்த நிலையில் எமது அபிவிருத்திப் பணிகளை சில சக்திகள் இகழ்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். இத்தகைய அபிவிருத்தி தேவையா என குறை கூறுகின்றனர். சகலருக்கும் சகல வசதிகளையும் பெற்றுக் கொடுப்பது எமது நோக்கமாகும். அதற்கு மக்களின் பங்களிப்பு மிக அவசியமாகும்.
ஐந்து வருடங்களில் நாட்டை மீட்டு அடுத்து ஐந்து வருடங்களில் நாட்டை பாரிய அபிவிருத்தியில் உள்ளாக்கியுள்ளோம்.
படிப்படியாக நம் அபிவிருத்தியை முன்னேற்றகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் போல் நாட்டைப் பல வருடங்களாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு அபிவிருத்தி செய்யாமலிருப்பது எமது நோக்கமல்ல.
 
இன்றுள்ள இந்த சிறந்த சூழலை குழப்பி நாட்டை மீள பாழடைந்த நிலைக்குத் தள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment