Tuesday, December 9, 2014

படகு பழுதடைந்து நிலையில்இலங்கையில் கரை ஒதுங்கிய 3 தமிழக மீனவர்கள் மீட்பு: காரைக்கால் அழைத்து வரப்பட்டனர்!

Tuesday, December 09, 2014
காரைக்கால்::நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதடைந்து நின்றுவிட்ட நிலையில் கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டு இலங்கையில் கரை ஒதுங்கிய நாகை மாவட்ட மீனவர்கள் 3 பேர் மீட்கப்பட்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஜோதிமணி (வயது 40), காளிதாஸ்(38) மற்றும் காளியப்பன் (30) ஆகியோர் கடந்த 26-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர்களது படகு பழுதடைந்தது. எனவே கரை திரும்ப முடியாமல் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். அப்போது கடல் சீற்றமாக இருந்ததாலும், காற்று வேகமாக வீசியதாலும், கடல் அலைகளால் அவர்களது படகு இலங்கை யாழ்ப்பாணம் அருகே கரை ஒதுங்கியது. அங்கிருந்த சுழிபுரம் மீனவர்கள் தமிழக மீனவர்கள் மூன்று பேரையும் மீட்டனர்.

இலங்கையில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் மூன்று பேரிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் படகு பழுதானதால்தான் அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் இலங்கையில் கரை ஒதுங்கியது தெரிய வந்ததை தொடர்ந்து மீனவர்கள் மூவரையும் நேற்று முன்தினம் அவர்கள் விடுவித்தனர்.

அதனைத்தொடர்ந்து மீனவர்கள் மூவரையும், அவர்களது படகையும் நேற்று முன்தினம் சர்வதேச கடற்பகுதியில் இந்திய கடலோரக்காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் மீனவர்கள் 3 பேரையும், அவர்களது படகையும் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமியிடம் இந்திய கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அந்த மீனவர்கள் கூறும்போது, “நாங்கள் கடந்த 26-ந்தேதி மீன்பிடிக்கச் சென்றபோது படகு பழுதானதால் 28-ந்தேதி இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் கரை ஒதுங்கினோம். அங்குள்ள மீனவர்கள் எங்களை மீட்டு இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் எங்களிடம் விசாரணை செய்தபோது படகு பழுதானதால் ஊர் திரும்ப முடியாமல் இலங்கையில் கரை ஒதுங்க நேரிட்டதாக கூறினோம். விசாரணைக்கு பிறகு அவர்கள் எங்களை விடுவித்தனர்.

எங்களை மீட்ட சுழிபுரம் மீனவர்களுக்கும், எங்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்ட மத்திய-மாநில அரசுகளுக்கும் நாங்கள் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்தனர். 

No comments:

Post a Comment