Tuesday, December 9, 2014

ஜனாதிபதித் தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டி:இரு ஆட்சேபனைகள் ஆணையாளரினால் நிராகரிப்பு!

Tuesday, December 09, 2014
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அடங்கலான 19 வேட்பாளர்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்தார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் மைத்திரிபால சிறிசேனவினதும் வேட்புமனுக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரு ஆட்சேபனைகளும் இதன்போது தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.
 
ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக நேற்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தேர்தலில் போட்டியிடும்
 
19 வேட்பாளர்களும் கட்சி முக்கியஸ்தர்களுடன் சுபநேரத்தில் தேர்தல் செயலகத்துக்கு வருகை தந்து தமது வேட்புமனுக்களை நேரில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளித்தனர்.
 
வேட்பாளர்களுக்கென தனியான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததோடு ஒவ்வொரு வேட்பாளராக ஆணையாளர் முன்னிலையில் தமது வேட்புமனுக்களை கையளித்தனர்.
 
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த 7 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி 17 கட்சிகள் சார்பில் 2 சுயேச்சை குழுக்கள் சார்பிலும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்தது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலை 10.20 மணிக்கு அலரி மாளிகையிலிருந்து தேர்தல் செயலகத்திற்கு பயணமானார். இலங்கையின் முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ அவருக்கு நீர் பருக்கியதோடு அங்கிருந்த பெளத்த மத குருமார்களின் ஆசியை பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக புறப்பட்டார். காலை 10.28 மணிக்கு தேர்தல் செயலகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை அங்கு குழுமியிருந்த அமைச்சர்கள் எம்.பி.கள் வரவேற்றனர்.
 
காலை 10.44 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷவினால் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. அவருடன் ஐ. ம. சு மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த்தும் உடனிருந்தார். அதற்கு முன்னர் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் மைத்ரிபால சிரிசேன அடங்கலான 18 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்
 
காலை 11.00 மணிக்கு வேட்புமனுக்கான கால அவகாசம் முடிவடைந்ததோடு 11.30 மணிவரை ஆட்சேபனைகளை முன்வைக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் போது ஐ. ம. சு. மு. வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேட்புமனுவுக்கு எதிராக கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும் புதிய ஜனநாயக முன்னாள் வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் வேட்புமனுவுக்கு எதிராக நாத் அமரகோனும் ஆட்சேபனைகளை எழுத்து மூலம் முன்வைத்திருந்தனர். ஆனால் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் கீழ் வேட்புமனு நிராகரிப்பு ஒழுங்கு விதிகளுக்கு அமைய பொருத்தமற்றது என்பதால் அந்த ஆட்சேபனைகள் நிராகரிப்பதாக ஆணையாளர் அறிவித்தார்.
 
இதனை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் தாக்கல் செய்யப்பட்டுள்ள 19 மனுக்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இரு சுயேச்சை வேட்பாளர்களினதும் இலட்சினைகளுக்கும் அனுமதி வழங்குவதாக ஆணையாளர் அறிவித்தார். கட்சிகளின் பெயர்கள். வேட்பாளர் பெயர்கள், இலக்கம் இலட்சினை என்பன விரைவில் வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
மூன்று வேட்பாளர்கள் மாத்திரமே தமது சொத்து விபரங்களை வெளியிட்டிருப்ப தாகவும் ஒரு வார காலத்தினுள் ஏனைய வேட்பாளர்களும் தமது சொத்து விபரங்களை வெளியிடுமாறும் அவர் கோரினார்.
 
வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு ஒத்துழைக்குமாறும் மூன்று வெளிநாட்டு கண்காணிப்பாளர் குழுக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
8 ஆம் திகதி முதல் ஜனவரி 08 ஆம் திகதி வரையில் பொதுச் சட்டத்துடன் தேர்தல் சட்ட விதி முறைகளும் நடைமுறையில் இருப்பதனால் தமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை சட்ட விதி முறைகளுக்கமைய செயற்படுமாறு அறிவுறுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குச் சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுமெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறும் இடம் அல்லது கட்சி அலுவலகம் தவிர்ந்த ஏனைய இடங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், போஸ்டர்கள், இலக்கங்கள். பதாகைகள். சித்திரங்கள் என்பன காட்சிப்படுத்தப்படுவது சட்டப்படி குற்றமாகுமெனவும் ஆணையாளர் வலியுறுத்தினார்.
 
பிரதான வேட்பாளர் பங்கெடுக்கும் கூட்டத்தில் மட்டும் குறிப்பிட்ட தூரத்திற்கு சோடனைகளை முன்னெடுக்க கட்சி செயலாளர் அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும்.
இதேபோன்று வேட்பாளர் பயணம் செய்யும் வாகனம் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் பெண்கள், பதாகைகள், கொடிகள், இலக்கங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஓட்டப்படுவது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் செயலெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வேட்பாளர்கள் தபால் மூலம் தமது செய்திகளை இலவசமாக வாக்காளர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.
 
வேட்பாளர் நாடு முழுவதும் தேர்தல் முகவர்களையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் முகவர்களையும் தேர்தல் காரியாலயங்களையும் நியமிக்க முடியும். தேர்தல் ஒன்றியங்களிலிருந்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படவுள்ளனர்.
 
பிற நாட்டு அல்லது பிற அமைப்புகளிலிருந்து கண்காணிப்பாளர்கள் தேவைப்படின் வேட்பாளர்கள் கோரிக்கை முன்வைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
 
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகி யவற்றில் 15 நிமிடங்களுக்கு குறையாமலும் 30 நிமிடங்களுக்கு மேற்படாமலும் ஆகக்குறைந்தது 90 நிமிடங்களுக்கு நாளொன்றுக்கு மூன்று தடவைகள் இலவச விளம்பரங்களை பெற்றுத் தருவது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
வேட்பாளர்கள் வன்முத்துடனும் பிறிதொரு நபரை பாதிப்புக்குள்ளாக்கும் வகையிலும் பிரசாரங்களை முன்னெடுக்க கூடாதெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
அரசாங்க உத்தியோகத்தர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் பொதுச் சொத்துக்களை தேர்தலுக்காக பாவிப்பது சட்டவிரோதச் செயலெனத் தெரிவித்த ஆணையாளர் ஊடகங்கள் தேர்தல் களத்தில் பக்கச் சார்பின் நடுநிலைமையுடன் செயற்பட வேண்டு மெனவும் கேட்டுக்கொண்டார்.
 
வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வு முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சக வேட்பாளர்களுடன் அலவளாவினார்.
 
அதனை தொடர்ந்து தேர்தல் செயலகத்திற்கு வெளியில் வந்த அவரை அமைச்சர்கள் எம்.பிக்கள். மற்றும் முக்கியஸ்தர்கள் கோஷமெழுப்பி வரவேற்றனர். ஜனாதிபதியை வரவேற் பதற்காக வீதியின் இருமரங்கிலும் பெருமளவு மக்கள் ஜனாதிபதியின் புகைப்படங்களை ஏந்தியவாறு குழுமியிருந்தனர்.
 
எதிர்தரப்பு வேட்பாளரான மைத்ரிபால சிரிசேனவை வரவேற்க ஐ. தே. க. முக்கிஸ்தர்கள் வருகை தந்திருந்தனர். ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறுகிறது.
 
போட்டியிடும் வேட்பாளரின் பெயர் கட்சி
 
1. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஜனசெத பெரமுன
2. திரு. எம்.பி. தெமிணிமுல்ல ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு
3. திரு. பாணி விஜேசிறிவர்தன சோசலிச சமத்துவக் கட்சி
4. திரு. சிறிதுங்க ஜயசூரிய ஐக்கிய சோசலிச கட்சி
5. திரு. ராஜபக்ஷ பேர்சி மஹேந்திர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
6. திரு. ஜயந்த குலதுங்க எக்ஸத் லங்கா மகா சபா
7. திரு. விமல் கீகனகே இலங்கை தேசிய முன்னணி
8. திரு. பள்ளே வத்தே கமராலலாகே புதிய ஜனநாயக முன்னணி
மைத்திரீபால யாப்பா சிறிசேன
9. திரு. ஐ.எம். இல்யாஸ் சுயேச்சை
10. திரு. இப்றாஹிம் நிஸ்தார் மொஹமட் மிப்லார் ஐக்கிய சமாதான முன்னணி
11. திரு. பொல்கம்பல ராளலாகே சுயேச்சை
சமிந்த அநுருத்த பொல்கம்பல
12. துரு. துமிந்த நாகமுவ முன்னிலை சோஷலிஸ கட்சி
13. திரு. ஏ.எஸ்.பீ. லியனகே ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி
14. திரு. சுந்தரம் மகேந்திரன் நவ சம சமாஜக் கட்சி
15. திரு. கட்டுகம்பல அப்புகாமிலாகெ ஜனநாயக தேசிய இயக்கம் பிரசன்ன பிரியங்கர
16. திரு. ராஜபக்ஷ ஆரச்சிலாகே எமது தேசிய முன்னணி நாமல் அஜித் ராஜபக்ஷ
17. திரு. ரத்நாயக ஆரச்சிகே சிறிசேன தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி
18. திரு. சரத் மனமேந்திர நவ சிஹல உறுமய
19. திரு. ருவன்திலக்க பேதுரு ஆரச்சி எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய

No comments:

Post a Comment