Wednesday, November 26, 2014

மலேசிய UMNO கட்சியின் சர்வதேச மாநாட்டில் ஹக்கீம், ஹசனலி, ஜெமீல் பங்கேற்பு: மு.கா. ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, November 26, 2014
இலங்கை::மலேசியாவின் ஆளும் கட்சியான ஐக்கிய மலே தேசிய முன்னணியின் (UMNO) சர்வதேச மாநாடு  திங்கட்கிழமையும்  செவ்வாய்க் கிழமையும் அந்நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இடம்பெற்றது.
 
மலேசியப் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் மு.கா.குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றார்.
 
நேற்று  இடம்பெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் இவருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மு.கா. செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி, அமைச்சர் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் எம்.எச்.எம்.சல்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டின் இறுதி அமர்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிறப்புரையாற்றினார். இந்த சர்வதேச மாநாட்டில் எழுபதுக்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
 
அதேவேளை மேற்படி ஐக்கிய மலே தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றுக்கு இடையிலான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நாளை இன்று புதன்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
 
அத்துடன் இந்த விஜயத்தின் போது அமைச்சர் ஹக்கீம், அந் நாட்டின் நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சரை சந்திப்பதோடு, வர்த்தக மன்றம், மலேஷிய சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.
 
நன்கு ஒன்றிணைக்கப்பட்ட உலகம்; தேசத்தைக் கட்டியெழுப்புவதில் எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் கலந்துரையாடலில் அமைச்சர் ஹக்கீம் விரிவுரை நடத்தவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment