Friday, November 28, 2014

சர்வதேச நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பணம் புலிகளின் செயற்பாட்டினை பலப்படுத்தியது: பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

     
     
     

Friday, November 28, 2014
இலங்கை::புலிகள் பயங்கரவாதத்தின் ஆயுதக்கொள்கை சர்வதேச அளவில் பலமடையவும் சர்வதேச அளவில்  புலிகள் பலமான இயக்கமாக உருவெடுக்கவும் இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளுக்கிடையேயான அரசியல் பாதுகாப்பு புரிந்துணர்வின்மையே காரணம் என தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ புலிகளின் தமிழீழ கோட்பாட்டையும் தாண்டிய சர்வதேச குற்றங்களில் விடுதலைப்புலிகள் செயற்பட்டனர் எனவும் குறிப்பிட்டார்.
 
தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு பிரதம அதிதிகளுக்கான மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமாகியது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்ப உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
 
நாட்டில் முப்பது வருட கால ஆயுதப்போராட்டத்தினை விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட போது சர்வதேசத்தின் பார்வை மிகவும் குறைவாகவே இருந்தது. நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்பாடுகள் இல்லாமையே இலங்கையில் இருந்து கொண்டு சர்வதேச பலம் பொருந்திய தீவிரவாத இயக்கமொன்று ஆரம்பமாக காரணமாக அமைந்தது. கடந்த மூன்று தசாப்த காலத்தில்   புலிகள் தீவிரவாதம் மிக மோசமானதும் பயங்கரமானதுமான அமைப்பாக தோற்றம் பெற்றிருந்தது.  புலிகளின் சர்வதேசத் தொடர்பு அவர்களின் சர்வதேச வலையமைப்பு என்பன மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்றமடைந்திருந்தது.
 
குறிப்பாக தமிழீழம் என்ற கோட்பாட்டில்  புலிகள் இயக்கம் ஆரம்பமாகியது என்று கூறினாலும் அதையும் தாண்டி சர்வதேச குற்றங்களில் சர்வதேச தீவிரவாதிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக இந்த முப்பது ஆண்டுகளில் ஆட்கடத்தல் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டிருந்தனர். வடக்கு கிழக்கில் இருந்து விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் இயக்கத்தினரை மேற்கு மத்திய மற்றும் தென் ஆசிய நாடுகளுக்கு கடத்தியிருந்ததுடன் சட்ட விரோத ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
 
அவுஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை செய்து வந்தனர். அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளுடனான ஆயுத மாற்றுக் கலாசாரத்தில்  புலிகளின் செயற்பாடுகள் காணப்பட்டது. இவை அனைத்திற்கும் ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளை தமது சந்திப்பு வலயமாக பயன்படுத்திக் கொண்டனர்.
 
அதேபோல் சர்வதேச நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பணம் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டினை பலப்படுத்தியது. சர்வதேச வங்கிகள் பண பரிமாற்று செயற்பாடுகள் அனைத்தும்  புலிகளின் வங்கிக் கணக்குகளை நிரப்பியது. வடக்கில் தமது ஆயுத கலாசாரத்தையும் சட்ட விரோத செயற்பாடுகளையும் தயங்காது செய்வதற்கு பணவுதவியும் சர்வதேச பாதுகாப்பும் கைகொடுத்தது. அதுமட்டுமன்றி  புலிகளின் கடல் மார்க்க செயற்பாடுகள் தென்னிந்திய மற்றும் ஏனைய கடல் மார்க்கமான தாய்லாந்து இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கிடையே பரவியதுடன் 2006இல் தாய்லாந்து இந்தோனேஷியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்த இயக்கமாக பிரகடனப்படுத்தவும் இதுவே காரணமாக அமைந்தது.
 
எனவே, இலங்கை கடந்த முப்பது வருட காலமாக தனது எல்லையினை பாதுகாத்துக்கொள்வதில் பல சிக்கல்களை எதிர்கொண்டது. எனினும் 2005ஆம் ஆண்டிற்குப் பின்னர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் அரசியல் ஒத்துழைப்புக்கள் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவதுடன் சர்வதேச புரிந்துணர்வு செயற்பாடுகள் கைகொடுத்தது. அதன் பின்னரான 4 ஆண்டு காலத்தில் உலகின் பலம்பொருந்திய  புலிகளின் சாம்ராஜ்யம் முற்று முழுதாக அழிக்கப்பட்டது. தற்போது அதன் விளைவுகளையும் நன்மைகளையும் முழு நாட்டு மக்களும் அனுபவிக்க வழிவகுத்துள்ளது. யுத்தம் முடிவடைந்து மிகக்குறுகிய காலத்தினுள் நாட்டில் அபிவிருத்தி பலமடைந்து வருகின்றது.
எனவே, தற்போது ஆசியாவின் சமாதானமிக்க நாடாக இலங்கை மாறியுள்ளது. அதற்கு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களே முக்கியமானது.
 
எனவே, தற்போது ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு செயற்பாடுகள் மிகவும் முக்கியமானது. அதைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment