Friday, November 28, 2014

சோனியா முன்னிலையில் கட்சியில் இணைந்தார் நடிகை குஷ்பு! ஸ்டாலின் எதிரி அல்ல; கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெறுவேன்!

Friday, November 28, 2014
சென்னை::திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின. 
 
இந்தநிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு, இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், தனக்கு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும், தன்னை பற்றி வெளியாகும் வதந்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் நடிகை குஷ்பு கூறியிருந்தார்.
 
இந்நிலையில் அவர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேச இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதன்படி டெல்லியில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் உடனிருந்தார்.
 
இந்த சந்திப்புக்கு பின்னர் நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
 
சிறுவயது முதலே காங்கிரஸ் மீது எனக்கு ஈடுபாடு உண்டு என்றும் காங்கிரஸில் இணைந்தது பெருமையாக உள்ளது என்றும் கூறினார். நாட்டின் நலன் மீது என் கவனம் உள்ளது, தமிழ் நாட்டில் மட்டுமின்றி மொத்த நாட்டின் நலனின் மீதும் எனது கவனம் இருக்கும். இந்தியாவை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் ஒரு கட்சி காங்கிரஸ் மட்டுமே, எனவே நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன் என்றார்.
 
நான் பதவியை எதிர்பார்க்கக் கூடியவள் இல்லை. திமுகவில் 4 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன். பதவி வேண்டும் என்றால், அந்தக் கட்சியிலேயே கேட்டுப் பெற்றிருக்க முடியும்.
ஆனால் பதவி கேட்டதும் இல்லை. அதை விரும்பியதும் இல்லை. எந்தப் பொறுப்பு கொடுக்க வேண்டும் காங்கிரஸூக்குத் தெரியும். அவர்கள் கொடுப்பார்கள்.
மு.க.ஸ்டாலினை எப்போதுமே என்னுடைய எதிரி என்று கூறியது இல்லை. அவருடன் பிரச்னை என்று கூறியதும் இல்லை. என்னுடைய ராஜினாமா கடிதம் திமுகவின் பொருளாளராக இருந்த ஸ்டாலினுக்கும் சென்றிருக்கும்.
 
இப்போதுகூட எங்காவது ஸ்டாலினைப் பார்த்தால், அவருக்கு வணக்கம் சொல்லமாட்டேன் என்பதெல்லாம் இல்லை. அந்தப் பண்பாடு, மரியாதை என்றைக்கும் இருக்கும். சிலர் எல்லா விஷயத்துக்கும் கண், காது வைத்து உருவகப்படுத்துவர்.
அதற்கு நான் பொறுப்பாக முடியாது. என் வீடு மீதான தாக்குதலுக்குப் பிறகும் ஒன்றரை ஆண்டுகள் திமுகவில் இருந்துள்ளேன். அதனால் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அப்போதே திமுகவிலிருந்து வெளிவந்து என் எதிர்ப்பைத் தெரிவிதிருக்க முடியும்.
திமுகவில் அவமானப்படுத்தப்பட்டதால் காங்கிரஸில் சேர்ந்தீர்களா என்ற கேள்விக்கு குஷ்பு, ‘இதன் காரணத்தை நான் அப்போதும் கூறவில்லை. அதை இப்போது கூற வேண்டிய அவசியமில்லை’ என பதிலளித்தார்.
 
அவர், பாஜகவில் இணைவதாக எழுந்த பேச்சு குறித்த கேள்விக்கு, ஒரே பக்கமாக அடிக்கும் அலையுடன் போக வேண்டிய அவசியமில்லை. அதன் எதிர்ப்புறம் செல்வதில் தவறில்லை எனவும் குஷ்பு தெரிவித்தார்.
 
மதநல்லிணக்கத்தை வளர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ். இந்தக் கட்சியால் மட்டும் தான் நம் நாட்டில் ஒற்றுமையை வளர்க்க முடியும் என்பது எனது கருத்து என்று குஷ்பு விளக்கம் அளித்தார்.
 
வரும் சட்டசபை தேர்தலில் திமுகவும் காங்கிரஸூம் கூட்டணி அமைத்தால் எனக்கு எதிர்ப்பு ஒன்று இல்லை. கூட்டணி தொடர்பாக கட்சியின் பெரியவர்கள் எடுக்க வேண்டிய முடிவு இது.
தற்போது டெல்லியில் உள்ளேன். சென்னைக்கு வந்தால், கண்டிப்பாக திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவேன்.
 
கருணாநிதி மிகச் சிறந்த தலைவர். அவர் மீது எனக்கு அன்பு, மரியாதை என்றைக்கும் உண்டு. இவ்வாறு நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் குஷ்பு பதிலளித்தார். அவருக்கு 5 மொழிகள் தெரியும்.

ராகுலை சந்தித்த நடிகை குஷ்பு!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மற்றும் முன்னாள் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
 
திமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகிய நடிகை குஷ்பு (44) நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் இன்று கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பூங்கொத்து அளித்தார்.

No comments:

Post a Comment