Wednesday, October 15, 2014
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று நெடுந்தீவுக்கு விஜயம் செய்தார். இலங்கையின் வரலாற்றில் நாட்டின் ஜனாதிபதி ஒருவர் யாழ். நெடுந்தீவுக்கு விஜயம் செய்வது இதுவே முதற்தடவையாகும்.
நேற்றுக்காலை நயினா தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நாகதீப விஹாரையில் இடம்பெற்ற விசேட மத வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் நெடுந்தீவுக்கு விஜயம் செய்து அங்கு பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
நெடுந்தீவில் அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகக் கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார். அதனையடுத்து நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இரண்டு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தையும் நெடுந்தீவு பிரதேசத்திற்கான மின் விநியோகத் திட்டத்தையும் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
நேற்று பிற்பகல் வேலணைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி வேலணை பிரதேச செயலகக் கட்டடத்தைத் திறந்து வைத்ததுடன் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் வித்தியாலயம், காரைநகர் கலாநிதி தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி ஆகியவற்றுக்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களையும் திறந்து வைத்து மாணவர்களின் உபயோகத்துக்குக் கையளித்தார்.
தமிழ்ப் பிரதேசங்களான மேற்படி பகுதிகளில் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட ஜனாதிபதி, தமிழ் கலாசார முறைப்படி மேளதாள இசை முழக்கத்துடன் திலகமிடப்பட்டு பொன்னாடை போர்த்தி மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வுகளில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, ஜோன் செனவிரத்ன உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகளுடன் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். அந்த மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களின் சுக துக்கங்களையும் தேவைகளையும் கேட்டறிந்தார்.
மின்விநியோகம்
நெடுந்தீவில் 90 வீதமான மக்கள் நலன் பெறும் வகையில் 47 மில்லியன் ரூபா செலவில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நெடுந்தீவு கிழக்கு மின் விநியோகத்திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் வேலணைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு 55 மில்லியன் ரூபா செலவில் பொது நிர்வாகங்கள் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டிருந்த பிரதேச செயலகக் கட்டடத்தையும் மின்சார சபைக் கட்டடத்தையும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
அதனையடுத்து அங்கிருந்த விசேட தொழில்நுட்பத்தின் உதவியுடன் நெடுந்தீவுக்கான மின் விநியோகத்திட்டத்தையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் சுமார் 750 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
நேற்றைய தினம் இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, ஜோன் செனவிரத்ன, பவித்ரா வன்னியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






















No comments:
Post a Comment