Friday, October 31, 2014

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கியநாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவினர் யாழ் கட்டளைத்தளபதி சந்திப்பு!

 Friday, October 31, 2014
இலங்கை:யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கியநாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு  குழுவினர்  யாழ் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேராவை நேற்றுமுன்தினம் (29) சந்தித்தனர்.
யாழ்ப்பாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கலந்துரையாடிய அக்குழுவினர் யாழ் பலாலியிலுள்ள இராணுவ பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
 
இதன்போது யுத்தத்திற்குப்பின்னர் இராணுவத்தினரால் வடபகுதியில் மேற்கோள்ளப்பட்ட சமூக  நலன்புரித் திட்டங்கள்,மக்களுக்கான கல்வி, பொருளாதாரம்,கலாசாரம் மற்றும் வாழ்வாதாரம் போன்ற உதவிகள் புரிவதற்காக இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பு மையம் குறித்து நான்கு பேர் அடங்கிய ஐ.நா குழுவினருக்கு யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி விவரித்தார்.
 
மேலும், வேலையற்ற மற்றும் குடும்பத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்களின் வாழ்க்கை தரத்தினை உறுதிப்படுத்தும்  நோக்கில் இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும்  மகளிர் மேம்பாட்டு திட்டம் குறித்தும் ஐ.நா குழுவினருக்கு, இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணி  7ம் படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி மேஜர் சந்திரிகா ராஜகுரு இதன்போது விளக்கமளித்தார்.
 
யாழ்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இராணுவத்தினர் எடுத்துவரும்  முயற்சிகளுக்கு ஐ.நா குழுவினர் இதன்போது பாராட்டு தெரிவித்தனர்.
 
ஜீன் போல் தலைமையிலான நான்கு பேர் அடங்கிய  இக்குழுவினர் வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

No comments:

Post a Comment