Saturday, October 11, 2014
சென்னையில் கைது செய்யப்பட்ட, பாக்., உளவாளி அருண் செல்வ ராஜிடம், மேலும், மூன்று நாள் காவல் விசாரணை நடத்த, 'பொடா' கோர்ட் அனுமதி அளித்துள்ளது. சென்னை, சாலிகிராமத்தில் பதுங்கி இருந்த பாக்., உளவாளி அருண் செல்வராஜை, செப்., 10ம் தேதி, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
அவன் அளித்த வாக்குமூலத்தில், 'ஹைடெக் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல், அதிகாரிகள் மற்றும் அரசியல் பெரும் புள்ளிகளை வீழ்த்தி, கல்பாக்கம் அணுமின் நிலையம் உட்பட, அத்தனை இடங்களிலும், உளவு தகவல்களை சேகரித்து வந்தேன்' என, தெரிவித்து இருந்தான். மேலும் அவன், புலிகள் அமைப்பில், உளவு தகவல் சேகரிக்கும் பிரிவில் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அதன் மூலம், பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் விடுதலைப்புலிகள் மூலம், தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த இருந்தது அம்பலத்துக்கு வந்தது.
அருண் செல்வராஜை ஏற்கனவே, ஆறு நாள் காவல் விசாரணைக்கு எடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்து இருந்தனர். அப்போது பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும், விட்ட குறை தொட்ட குறையாகவே இருந்துள்ளது. பல கேள்விகளுக்கு அவன் மவுனம் சாதித்து வந்ததால், அவனுக்கு உதவி செய்த அதிகாரிகள், அரசியல் பெரும் புள்ளி கள் குறித்த விவரங்களை எல்லாம் பெற முடியாத நிலை, தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு ஏற்பட்டது. அதுபோல், சி.பி.ஐ., அவனிடம் விசாரணை நடத்த மனு தாக்கல் செய்து இருந்தனர்; அந்த மனு தள்ளுபடி ஆனது. இந்நிலையில், சென்னையில் கைது செய்யப்பட்ட, பாக்., உளவாளிகளில், அருண் செல்வராஜ் மிக முக்கியமான ஆள் என்பதால், அவனிடம் விசாரணை நடத்த, மேலும் ஐந்து நாட்கள், காவல் விசாரணைக்கு அனுமதி கோரி, பூந்தமல்லி, 'பொடா' கோர்ட்டில், தேசிய புலனாய்வு அமைப்பினர், நேற்று முன்தினம் மனு செய்தனர்.
இந்த மனு, நீதிபதி மோனி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பாக்., உளவாளி அருண் செல்வராஜுக்கு, மேலும் மூன்று நாள் காவல் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனை, தேசிய புலனாய்வு அமைப்பினர், இன்று காலை 11:00 மணியில் இருந்து, 13ம் தேதி 4:00 மணி வரை விசாரிக்க உள்ளனர்.

No comments:
Post a Comment