Tuesday, October 14, 2014
இலங்கை::அரசியலல்ல, அபிவிருத்தியும் மக்கள் நலனுமே எமக்கு முக்கியம். நாம் அரசியல் செய்வதற்கு வடக்குக்கு வரவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் போது அதற்குத் தடையாக நிற்காது அரசாங்கத்துடன் வட மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்படுவதே சிறந்தது என்றும் தெரிவித்தார்.
அரசியல் நோக்கில் செயற்பட்டிருந்தால் பல பில்லியன் கணக்கான நிதியை வட மாகாண மக்களுக்காக செலவிட்டிருக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம். கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கான அபிவிருத்தி தொடர்பான விசேட மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா. ரிசாட் பதியுதீன். ஜோன் செனவிரட்ன, குமார வெல்கம, பந்துல குணவர்தன உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள். அமைச்சர்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பெருமளவில் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி: எமக்கு அரசியல் முக்கியமல்ல, நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என்பதே எமது நோக்கம்.
வடக்கிலுள்ள பிரச்சினைகளை என்னால் கைவிட்டிருக்க முடியும். அல்லது காலம் தாழ்த்தியிருக்க முடியும். என்னால் அவ்வாறு செயற்பட முடியாது.
பெறக்கூடிய அத்தனை கடன்கள். நிதி உதவிகளையும் பெற்று நாம் வடக்கிற்கு அபிவிருத்திக்காக செலவிட்டுள்ளோம். நான் வேறு வகையில் சிந்தித்திருந்தாலும் பில்லியன் கணக்கான ரூபா நிதியினை வடக்கிற்காக செலவளித்திருக்க மாட்டேன் என்பதை சகலரும் உணர வேண்டும்.
அதேபோன்று அரச அதிகாரிகள் மக்களுக்கான அபிவிருத்தியிலும் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமாகும். சில பிரதேசங்களில் நீர் பிரச்சினைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. எந்தப் பகுதியாக இருந்தாலும் மக்களுக்கு நீர் மிக அவசியமானது.
நாம் இரணை மடுவுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக மொரகஹகந்தை யிலிருந்து செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்தோம். அந்த நீரை இரணைமடு குளத்தில் நிரப்ப வேண்டும். எனினும் அந்த குளம் கடந்த பல வருடங்களாக புனரமைக்கப் படாமல் உள்ளதைக் காண முடிகிறது.
தண்ணீரைப் பெற்றுக் கொடுப்பதில் அரசியல் நோக்கம் தேவையில்லை. நாம் நிதி வழங்கியும் உள்ளோம். நாம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றினூடாக பெறும் கடன்களை மீளச் செலுத்த வேண்டும். அந்த நிதி பிரயோசனப்படுத்தப்படுவது முக்கியம். மக்களுக்கான தேவைகளை நிறைவேற்று வதில் அரசியல் பார்க்கக்கூடாது. அவற்றை அரசியலுக்குள் அகப்படுத்தக்கூடாது என்பதை நான் கூறி வைக்க விரும்புகிறேன்.
மக்களுக்குக் குடிப்பதற்கும் நீர்ப்பாசனத்துக் குமான நீரைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கமும் வட மாகாண சபையும் ஒன்றுபட்டுச் செயற் படுவது முக்கியம். வடக்கைப் பொறுத்தவரை மொத்தமாக ஐந்து மாவட்டங்களிலும் 12 இலட்சம் மக்களே வாழ்கின்றனர். மாவட்ட ரீதியில் 85 பில்லியன் ரூபாவரை செலவிடப்பட்டுள்ளது.
வீதிகள் மற்றும் நீர் வழங்கல். இதர பாசன திட்டங்களுக்கு 200 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வட மாகாணத்திலுள்ள அரசாங்க உத்தி யோகத்தர்களுக்குச் சம்பளம் வழங்க 12 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. அத்தோடு நாம் 100ற்கு 90 வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ளோம்.
இந்த மாவட்டங்களில் ஆசிரிய வெற்றிடங்கள் எவ்வாறு இருப்பினும் க. பொ. த. சாதாரண தரம் மற்றும் உயர் தரங்களில் மாணவர்கள் சிறந்த பெறு பேறுகளை ஈட்டியுள்ளனர்.
அதற்காக நான் அதிபர் மற்றும் ஆசி ரியர்களுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேவேளை இப்பகுதிகளில் சுகாதாரத் துறையும் சிறப்பாக உள்ளது. நான் அறிந்த வகை யில் இங்கு சிசு மரண எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து காணப்படுவது திருப்தியளிக்கிறது.
கடந்த காலங்களில் நாம் வெளி நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய் வதை நிறுத்துவதற்கு இங்குள்ள விவசாயிகளின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது. உற்பத்தித் துறையும் மிகவும் இங்கு முன்னேற்றகரமாக உள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் பிரதிபலன்களே இவை.
தேசிய ரீதியிலான முன்னேற்றத்தைப் பொறுத்தவரை மும்மடங்கு அதிகமான முன்னேற்றத்தை இப்பிரதேசம் அடைந்துள்ளது. யாழ் மாவட்டத்திலுள்ள வீதிகளுக்காக மாத்திரம் அரசாங்கம் 34,000 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. மொத்தமாக ஐந்து மாவட்டங்களுக்கும் வீதி அபிவிருத்திக்காக 80,000 மில்லியன் ரூபாவை அரசு செலவிட்டுள்ளதைக் குறிப்பிட வேண்டும்.
வட மாகாண சபை அமைவதற்கு முன்பு நாம் பிரதேச சபை, நகர சபை, மாகாண சபை என்று பார்க்காமல் அனைத்து வீதிகளையும் நாமே அபிவிருத்தி செய் தோம். அப்போது எமக்கு அதற்கு வாய்ப்பும் உரிமையும் இருந்தது. இப் போது பல்வேறு தடைகள் உள்ளன. அவ்வாறு நாம் செயற்படும் போது தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக் கப்படலாம். அதனை இருசாராரும் ஒற்றுமையுடன் இவற்றை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அரசியல், அபிவிருத்தி, மக்களுக்கான நலன்புரித் திட்டங்கள் இவை வேறு வேறு என்பதை புரிந்து செயற்பட வேண்டும். நாட்டின் அபிவிருத்தியிலும் மக்கள் நலனுக்கான செயற்பாடுகளிலும் அரசியலை இணைத்துக் கொள்ளக் கூடாது.
மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி எனப் பார்க்கக் கூடாது. அனைவரும் இணைந்து செயற் பட வேண்டும். யாழ். மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திற்கு எதிர்க் கட்சியினரும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைக் காமை கவலை தரும் விடயம். அவ்வாறு கலந்துகொண்டிருந்தால் சுமுகமாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. முதலமைச்சரும் மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்களும் கலந்துகொள்ளாமை வருத்தமளிக்கிறது.
நான் அரசியல் செய்ய இங்கு வரவில்லை நான் இதற்கு முன்னரும் பல தடவைகள் இங்கு வந்துள்ளேன். அரசியல் அல்ல நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என்பதே எமது நோக்கம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment