Monday, October 13, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ் ரயில் நிலையத்தையும் திறந்து வைத்தார்!

Monday,October, 13, 2014
இலங்கை::
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடபகுதிக்கு வருகைதந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

பளை புகையிரத நிலையத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை இன்றைய தினம் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு வரவேற்றிருந்தனர்.

நாளொன்றுக்கு நான்கு தடவைகள் சேவையை மேற்கொள்ளவுள்ள யாழ்.தேவியின் முதல் பயணத்திற்கான சீட்டை ஜனாதிபதி அவர்கள் பெற்றுக் கொண்டு இச் சேவையினை ஆரம்பித்து வைத்தார்.

பளை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்.தேவி புகையிரதத்தில் பயணத்தை தொடர்ந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன போக்குவரத்து பிரதியமைச்சர் றோகன திஸநாயக்க, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) இந்திய உயர்ஸ்தானிகர் வை.சிங்ஹா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.

இதன்பிரகாரம் யாழ்.தேவியில் பயணித்த ஜனாதிபதி அவர்கள் கொடிகாமம், நாவற்குழி ஆகிய பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரத நிலையங்களை திறந்து வைத்த அதேவேளை, யாழ்ப்பாணத்தின் பிரதான புகையிரத நிலையத்தையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் மக்களின் பாவனைக்கும் கையளித்தார்.

இந்திய அரசின் 800 மில்லியன் ரூபா செலவில் வடபகுதிக்கான புகையிரதப் பாதை மீள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்த யாழ்.தேவி திரும்பி போகாத வகையில் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது இதனையடுத்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கிற்கான புகையிரதப் பாதைகள் முற்றாக அழிந்தும் சேதமடைந்தும் இருந்த நிலையில் மகிந்த சிந்தனைக்கு அமைவாக இந்திய அரசின் நிதியுதவியுடன் புகையிரதப் பாதை வவுனியா ஒமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் பாதைகள் மீள்புனரமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைவரையிலான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பளையிலிருந்து புறப்பட்ட யாழ்.தேவி ரயில் சிறப்புற அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரத நிலையங்களும் சிறப்புற அலங்கரிக்கப்பட்டிருந்ததை காணப்படுகின்றது.

இதன்பிரகாரம் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையினை ஜனாதிபதி அவர்கள் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் மீளவும் இன்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ளமை விசேட அம்சமாகும்.

பளையிலிருந்து யாழ்.தேவி புகையிரதம் தனது பயணத்தை ஆரம்பித்ததும் அங்கு கூடிநின்ற மாணவர்களும் பொதுமக்களும் கைகளை அசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வழியனுப்பி வைத்தனர்.

இதேபோன்று வழிநெடுகலும் நின்றிருந்த மக்களும் கைஅசைத்து யாழ்.தேவியை வரவேற்ற அதேவேளை மகிழ்ச்சி ஆரவாரம் செய்திருந்த வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது கைகளை அசைத்து நன்றி தெரிவித்தார்.

இவ் புகையிரத சேவையானது வடக்கு தெற்கு உறவின் பாலமாகவும் நட்பின் பாலமாகவும் எதிர்காலத்தில் அமையப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
3 ஆண்டுகளில் 146 கி.மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டது. இதற்காக ரூ.4800 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ரெயில் பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் இன்று ரெயில் சேவை தொடங்கியது.

No comments:

Post a Comment