Friday, October 31, 2014

தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நிச்சயமாக முயலும்: தமிழிசை சவுந்தரராஜன்!

Friday, October 31, 2014
சென்னை::தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நிச்சயமாக முயலும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்கட் மற்றும் பிரசாந்த் ஆகிய தமிழக மீனவர்கள் 5 பேர், போதை வஸ்துக்களை கடத்தியதாக இலங்கை அரசால் 2011-ல் கைது செய்யப்பட்டு நடந்து கொண்டிருந்த வழக்கில், இலங்கை நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. இது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும்.

நவம்பர் 14-ந் தேதிக்குள் அவர்கள் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்¢டிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். எனினும் இந்த விஷயம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு, நடத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் இது பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு என்றே தமிழக மீனவர்கள் உணர்வு பூர்வமாக கொந்தளித்துப் போய் உள்ளனர்.

தமிழக மீனவர்களை அவ்வப்போது கைது செய்வதும் அவர்களது படகுகளை பிடித்து வைத்துக் கொள்வதுமான இலங்கை அரசின் செயல்பாடுகள் பலமுறை கண்டிக்கப்பட்டும் இதுவரை ஒரு நிரந்தர தீர்வு எட்ட முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கையில், எரிகிற கொள்ளியில் எண்ணைய் ஊற்றுவது போல இலங்கை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தமிழக மீனவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது குறித்து தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமருக்கும், வெளியுறவுத்துறை மந்திரிக்கும், தொலைநகல் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு, உடனடியாக இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு இலங்கை அரசுடன் பேசி, தமிழக மீனவர்களை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

இது குறித்து இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் உடனடி நடவடிக்கைக்கான வழிமுறைகள் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நிச்சயம் முயலும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
 

No comments:

Post a Comment