Friday, October 24, 2014

வெள்ளம் பாதித்த காஷ்மீருக்கு மேலும் ரூ.750 கோடி: மோடி வருகைக்கு எதிர்ப்பு: காஷ்மீரில் முழு அடைப்பு!

Friday, October 24, 2014
ஸ்ரீநகர்::பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது. அங்கு சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் ஸ்ரீநகர் திரும்பிய அவர், அங்கு மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
 
வெள்ளம் பாதித்த காஷ்மீருக்கு மேலும் ரூ. 750 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே இம்மாநிலத்திற்கு ரூ. ஆயிரம் கோடியை பிரதமர் அறிவித்ததது நினைவிருக்கலாம். தற்போது கூடுதலாக ரூ. 750 கோடி நிவாரண பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
 
பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் பயணத்துக்கு பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாடு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.
 
இதனால் ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அதேநேரத்தில் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் நடத்தினர். வாகனங்கள் பெருமளவு ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு பஸ்களும் ஓடவில்லை. தீபாவளியையொட்டி, அரசு நிறுவனங்கள், வங்கிகள் செயல்படவில்லை.
 
எல்லைப்பகுதி மாவட்டமான குப்வாராவில் முழு அடைப்பு பிசுபிசுத்தது. சகஜ வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. காஷ்மீரின் வடபகுதிகள், அனந்த்நாக், மத்திய காஷ்மீர் மாவட்டங்களில் முழு அடைப்பின் காரணமாக மாமூல் வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
 
அதே நேரத்தில் எங்கும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததாக தகவல் இல்லை.  

No comments:

Post a Comment