Monday, September 29, 2014

இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் முயற்சி: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை!

Monday, September 29, 2014
சென்னை::அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்தது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் முயற்சியென்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
 
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் பிரதமர் மோடி தீவிரமாகவுள்ளார். தேர்தலுக்கு முன்பிருந்தே இது குறித்து அவர் பேசி வருகிறார். தனது பதவியேற்பு விழாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இலங்கையிலிருந்து டெல்லி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
 
இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மோடி, அங்கு ராஜபக்‌சவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்கு தீர்வு காணும் முயற்சியாகும் இதை யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால், நாம் பேசினால்தான் முடியும். தமிழகத்தின் மற்ற கட்சிகளைவிட இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்பதில் பாஜக உறுதியாகவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment