Tuesday, September 2, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாத, இனவாத கொள்கை: கூட்டமைப்பிற்கு எதிராக புதிய கூட்டணி: ஆனந்தசங்கரி!


Tuesday, September 02, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று கட்சியொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதியக் கூட்டணியில் ஏற்கனவே மூன்று கட்சிகள் உள்வாங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் ஏனைய சில கட்சிகளையும் இணைத்துக் கொண்டு  முன்னோக்கிச் செல்ல உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் கட்சிகளையும், புதிய கூட்டணியுடன் இணைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் பல கட்சிகளுக்கு அழைப்பிதல் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி தரப்பிடம் வினவிய போது இந்தப் புதிய  கூட்டமைப்பு தொடர்பாக எந்த வித பேச்சுக்களையும் இதுவரை முன்னெடுக்கவில்லை என  தெரிவித்தனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT) தரப்பினருடன் தொடர்பு கொண்ட போது கூட்டமைப்பிற்குக்கு எதிராக உருவாக்கப்படும் புதிய கூட்டமைப்பில் இணையும் உத்தேசம் தமக்கு அறவே கிடையாது என தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய கூட்டமைப்பின் உருவாக்கம் குறித்து எதிர்வரும் 4ஆம் திகதி முதலாவது கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்த ஆனந்த சங்கரி அழைப்பிதல் அனுப்பிய கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை இது குறித்து செய்திகளை வெளியிட்டுள்ள கொழும்பு ஊடகங்கள், இந்த புதியக் கூட்டணியில் ஏற்கனவே மூன்று கட்சிகள் உள்வாங்கப்பட்டு உள்ளதாகவும், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அதில் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளன.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாத, இனவாத கொள்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதற்கு எதிரான மாற்று அரசியல் கட்சியாக புதிய கூட்டமைப்பு செயற்படும் என ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment