Saturday, August 30, 2014

ஆஸ்திரேலியாவுக்கு அருகே நியூகினியாவில் எரிமலை வெடித்தது!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Saturday, August 30, 2014
சிட்னி::ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே பப்புவா நியூகினியா தீவில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. இதையடுத்து, அந்த மலைப்பகுதியை ஒட்டியுள்ள நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.  நியூகினியாவில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே 160 கி.மீ. தொலைவில் பப்புவா நியூகினியா தீவு அமைந்துள்ளது. இங்கு 2,270 அடி உயரமுள்ள மவுண்ட் தாவூர்வுர் மற்றும் மவுன்ட் வல்கனோ என்ற 2 மலைகள் உள்ளன. இவற்றில் மவுன்ட் வல்கனோ கடந்த 1994ம் ஆண்டு எரிமலையாக வெடித்தது. இதில் ஏராளமான மக்கள் பலியாகினர். அத்துடன் பல்வேறு நகரங்கள் அழிந்தன. தற்போது அந்த மலையில் இருந்து அவ்வப்போது புகை மட்டுமே எழும்பி வருகிறது.

இந்நிலையில், அதன் அருகே இருக்கும் மவுன்ட் தாவூர்வுர் மலையில் நேற்று காலை எரிமலை வெடித்து சிதறியது. அம்மலையில் இருந்து கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு நெருப்பு கற்களும் சாம்பல்களும் 60 ஆயிரம் அடி உயரத்துக்கு எழும்பின. மலைக்குள் வெடிக்கும் சத்தம் கேட்டு வருகிறது. மலைப் பகுதியை ஒட்டி இருக்கும் ராபவுல் நகரில் சாம்பல் புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று ஆஸ்திரேலிய எரிமலை சாம்பல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மலையில் இருந்து எழும்பிய சாம்பல் புகை இன்று காலை தென்கிழக்கே ஆஸ்திரேலிய வான் எல்லை வரை பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து நியூகினியா வான் எல்லை வழியாக செல்லும் சிட்னி& டோக்கியோ, சிட்னி&ஷங்காய் செல்லும் 3 விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.பப்புவா நியூகினியாவில் இருந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் சில நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன என்று குவான்டாஸ் ஏர்லைன்ஸ் விமான செய்தி தொடர்பாளர் கூறினார்.அப்பகுதியில் எரிமலை தொடர்ந்து வெடித்தபடி இருப்பதால், அங்கு மேகமண்டலமாக சாம்பல் புகை சூழ்ந்துள்ளது. இது ஆஸ்திரேலியாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment