Saturday, August 30, 2014

கூட்டாக மீன் பிடிப்பது பற்றி ஆலோசனை : இந்தியா-இலங்கை முடிவு!

Saturday, August 30, 2014
இந்தியா-இலங்கை மீனவர்கள் கூட்டாக மீன் பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்த இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, இந்தியா-இலங்கை அதிகாரிகள் மட்டத்திலான முதல் கட்ட நல்லெண்ண ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.

இந்திய தரப்புக்கு மீன்துறை இணைச் செயலாளர் ராஜசேகரும், இலங்கை தரப்புக்கு அந்த நாட்டு மீன்துறை தலைமை இயக்குனர் நிர்மல் ஹெட்டியராச்சியும் தலைமை தாங்கினர். கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அதிகாரிகள், தமிழக-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கூட்டு விசாரணைக் குழு உள்ளது போல, ஆந்திரா-ஒடிசா கடல் பகுதிகளில் நிலவும் பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கூட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரினர். இதற்கு இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

மேலும் இலங்கை அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில் சட்ட நடைமுறைகள் பாராமல் முன்னதாக விடுதலை செய்யப்படுகிறார்கள். தற்போது இருதரப்பிலும் பிடிபட்ட மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்’ என்று தெரிவித்தனர். மேலும் இந்தியா-இலங்கை மீனவர்கள் கூட்டாக மீன் பிடிப்பது தொடர்பான அம்சங்களை ஆராய்வது என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக 2-ம் கட்ட ஆலோசனை கூட்டத்தை, இலங்கை தலைநகர் கொழும்புவில் நடத்துவது என்றும் அதற்கான தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மீன்பிடித்தல் தொடர்பாக வியட்நாம் உள்பட சில நாடுகளுடன் இந்திய அரசு, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இலங்கை அரசுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இலங்கையுடன் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், மீன்பிடி தொழிலில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேம்படும் என்றும் மீனவர் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது.

No comments:

Post a Comment