Wednesday, August 27, 2014

கிழக்கு உக்ரைன் பிரிந்த பின்னர் ரஷ்யா-உக்ரைன் அதிபர்கள் முதன்முறையாக சந்திப்பு!

Wednesday, August 27, 2014
மாஸ்கோ::ரஷ்யாவின் உதவியால் உக்ரைனில் இருந்து கிழக்கு உக்ரைன் என்ற தனிநாடு உருவாக்கப்பட்ட பின்னர் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரொஷன்கோவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று முதன்முறையாக சந்தித்து பேசினார்.

உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க ரஷ்ய ஆதரவாளரான முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறியது.

இதனையடுத்து, தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சென்றனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதில் நகரில் உள்ள பல கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். போராட்டக்காரர்களுடன் சமாதானமாக போக விரும்புவதாக கூறிய அதிபர் விக்டர் யனுகோவிச் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்தார்.

அந்த குழுவின் ஆலோசனையின்படி, பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த விக்டர் யனுகோவிச்சை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதாக பாராளுமன்றம் அறிவித்தது.

அதிபர் வசிக்கும் மாளிகை உட்பட தலைநகர் கீவ் முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும், அதிபர் விக்டர் யனுகோவிச் கீவ் நகரை விட்டு வெளியேறிவிட்டதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

இதற்கிடையில், தனது படைபலத்தால் போராட்டக்காரர்களுக்கு உதவி செய்து உக்ரைனில் இருந்து கிழக்கு உக்ரைன் என்ற தனி நாட்டை ரஷ்யா உடைத்து உருவாக்கிய பின்னர் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரொஷன்கோவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இன்று முதன்முதலாக நேரில் சந்தித்துப் பேசினர்.

10 ரஷ்ய வீரர்களை உக்ரைன் படையினர் சிறைபிடித்து வைத்துள்ள இந்த வேளையில் ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் இரு நாட்டு தலைவர்களும் சாத்திய அறையினுள் தனிமையில் சந்தித்து நடத்திய இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், கிழக்கு உக்ரைனுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு வசதியாக கிழக்கு உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை உக்ரைன் அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் பெட்ரோ போரொஷன்கோவை விளாடிமிர் புதின் வலியுறுத்தியிருப்பார் என்று நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment