Sunday, August 24, 2014

நாட்டில் புலிகள் ஆதரவு மதகுருமார் சிலரின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் குறித்துப் பாரிய எதிர்ப்பலைகள்!

Sunday, August 24, 2014      
இலங்­கை::நாட்டில் புலிகள் ஆதரவு மதகுருமார் சிலரின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் குறித்துப் பாரிய எதிர்ப்பலைகள் எழுந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தத்தமது மதம் சார்ந்த மக்களுக்குச் சிறந்த மதபோதனைகளைச் செய்து நல்வழிகாட்டிகளாக இருந்துவரும் இத்தகைய சில மதகுருமார் தமது தேவையற்ற மூக்கை நுழைக்கும் அதிகப்பிரசங்கித்தனமான அரசியல் செயற்பாடுகள் காரணமாகவே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
 
இதுவொரு ஜனநாயக நாடு. இங்கு எவரும் அரசியலில் ஈடுபடலாம். அதற்கு எவரும் கட்டுப்பாடுகளையோ தடைகளையோ விதிக்க முடியாது. அதனால் மதகுருமார் அரசியலில் ஈடுபடுவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் அரசியலில் அவர்கள் நேரடியாக ஈடுபட்டுச் செயற்பட துணிவுடன் முன்வர வேண்டும். இதனைவிடுத்து மதத்திற்கும், அம்மதம் வழங்கியுள்ள உயரிய சமூக அந்தஸ்திற்கும் பின்னால் ஒழிந்து கொண்டு ஓர் அரசியல்வாதியைப் போன்று செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
ஒரு மதகுரு என்பவர் அன்பு, கருணை, காருண்யம் கொண்டவராக இருந்து நல்வழிப்படுத்தும் போதனைகள் மூலமான மக்களை ஆசிர்வதிக்க வேண்டும். இதனையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். இறைதூதர்களாக எண்ணிப் போற்றப்படும் மதகுருமார் சிறுபிள்ளைத்தனமாக அரசியலில் ஈடுபடுவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று.
அவ்வாறாயின் அவர்கள் முழுநேர அரசியல்வாதியாக தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். தாம் சார்ந்த மதத்தை ஒருபோதும் அரசியலுக்காகப் பயன்படுத்தவும் முனையக் கூடாது.
 
அண்மைக் காலங்களில் பொதுபல சேன அமைப்புத் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்துல ஞானதேரர் உரிய பதில்களை வழங்கி வருகிறார். தமது அமைப்பானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டின் இறைமையைப் பாதிக்கும் வகையிலோ, நாட்டின் தலைமையைக் காட்டிக் கொடுக்கும் வகையிலோ செயற்படவில்லை என்பதை அவர் ஆணித்தரமாகக் கூறி வருகிறார்.
 
பெளத்த மதத்தைக் காப்பாற்றுவதாகவே தமது செயற்பாடுகள் உள்ளதாக தேரர் அவர்கள் கூறுகிறார். உள்ளூரில் சில சகோதரச் சச்சரவுகள் தொடர்பாக அவ்வமைப்பைத் தொடர்புபடுத்தி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டின் இறைமைக்கோ அல்லது நாட்டுத் தலைமையின் கெளரவத்திற்கோ அவர்கள் என்றுமே பாதகமாகச் செயற்பட்டது கிடையாது.
 
இதேபோன்று மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோஸப் ஆண்டகை குறித்தும் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவரது சில செய்கைகள் நாட்டின் இறைமைக்குக் குந்தகத்தை ஏற்படுத்துவதாகச் சில அரசியல் பிரமுகர்கள் தமது பெயர்களைக் குறிப்பிட்டே குற்றம் சாட்டியிருக்கிறார்கள். குறிப்பாக ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஆயர் அவர்கள் தெரிவித்திருந்த கருத்து நாட்டில் ஒற்றுமையையும், இன ஐக்கியத்தையும் விரும்பும் மக்கள் பலரையும் ஆத்திரமடையச் செய்திருந்தது. அதன் வெளிப்பாட்டையே அரசியல் பிரமுகர்கள் சிலர் தமது கருத்துக்களாகத் தெரிவித்திருந்தனர்.
 
ஆனால் ஆயர் அவர்கள் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் தான் ஒருபோதும் நாட்டின் இறைமைக்கு எதிராகச் செயற்படவில்லை எனவும், ஒருபோதும் வெளிநாடுகளிடம் தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்தது கிடையாது எனவும் உறுதிபடத் தெரிவித்திருந்த கருத்து அவரது உண்மையான நிலைப்பாட்டை உலகிற்கு தெரியப்படுத்தியிருக்கிறது. இது வரவேற்கத்தக்கதும், பாராட்டுக்குரியதுமான ஒன்று. பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளங்களில் அடைபட்டுக் கிடக்கும் கருத்தையே தான் முன்வைப்பதாகவும் என்ற பொருள்பட அவர் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
 
இது நல்ல விடயம். தன் மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் உரிய பதிலளித்திருக்கிறார். நாட்டின் இறைமைக்கு எதிராகச் செயற்படவில்லை, வெளிநாடுகளிடம் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை எனும் ஆயர் அவர்கள் தெரிவித்த இரு கருத்துக்களையும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அரசியல் பிரமுகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறோம். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் இதே ஆயர் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார், அவர்களுக்குச் சார்பாகக் கருத்துக்களை முன்வைக்கிறார் எனும் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கானவர். அதற்குக் கூட இப்போது ஆயரால் தெரிவிக்கப்பட்டுள்ள இச்செய்தி பதிலளித்திருக்கிறது.
உண்மையில் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோஸப் ஆண்டகை மீது மக்கள் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டுள்ளார்கள். அவர் மீது சிலரால் அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டாலும் அவரது மதப் பிரசாரங்களில் பலரும் அவர்பால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். அடுத்த வருடம் இலங்கைக்கு வருகை தரவுள்ள போப் ஆண்டவர் இவரது பொறுப்பிலுள்ள மடுமாதா திருத்தலத்திற்கும் செல்லவுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்கத்துடன் இணைந்து ஆயர் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.
 
மதகுருமார் என்போர் மக்களுக்கு மதபோதனைகளைச் செய்வதுடன் நாட்டின் தலைமை நல்லாட்சி நடத்தவும் தமது ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதனை விடுத்து நாட்டைக் காட்டிக் கொடுத்து நாட்டின் தலைமைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது என்பது முறையான செயலாகாது. அவர்களை மதகுருமார் என அழைக்கவும் முடியாது. பல சந்தர்ப்பங்களில் இலங்கை வரும் வெளிநாடுகளின் இராஜதந்திரிகள் வடபகுதிக்கு விஜயங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில்கூட ஒருசில மதகுருமார் அவர்களுடன் அரசியல் ரீதியான பேச்சுக்களை முன்னெடுத்து நாட்டையும், நாட்டுத் தலைமையையும் காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்பட்டுமுள்ளனர். இவை தவிர்க்கப்பட வேண்டும். மதகுருமார் அரசியல்வாதிகள் போன்று செயற்படுவதையே நாம் கண்டிருக்கிறோம் எனப் பலரும் கூறுவதை ஏற்றுக் கொள்ளவே வேண்டியுள்ளது.
 
மதகுருமார் அரசியலில் ஈடுபடுவதாயின் தமது மதத்தையோ அல்லது தமது மதகுரு எனும் உயரிய அந்தஸ்தையோ பாவிக்காது அரசியல்வாதியாகத் தம்மை மாற்றிக்கொண்டு அரசியல் ரீதியான கருத்துக்களை கூற வேண்டும். அல்லது மதகுருவாக இருந்து கொண்டே அரசியல்வாதியாகவும் மாறி அமைதியான முறையில் இரண்டு பதவிகளுக்கும் ஏற்றாற்போல் இரண்டையும் மேற்கொள்ள வேண்டும். ஒன்றுடன் ஒன்றை முரண்பாடாகக் கலந்து மதத்திற்கும், அரசியலுக்கும் இழுக்கை ஏற்படுத்தக் கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும்.

No comments:

Post a Comment