Thursday, July 24, 2014

மட்டக்களப்பு என்னும்போது அந்த பெருமையில் நாங்களும் பங்குகொள்கிறோம்: ஏ.எல்.எம்.அதாவுல்லா!

அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவனாக இருந்தாலும் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு என்னும்போது அந்த பெருமையில் நாங்களும் பங்குகொள்கிறோம் என உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையின் விருது வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவி;த்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாங்கள் என்ன எண்ணத்துடன் செயற்படுகின்றோமோ அந்த எண்ணமே எமக்கு வாழ்வாக மாறும்.ஒவ்வொரு விடயத்தினையும் ஆரம்பிக்கும்போது எண்ணம் பிரதானமாக கருதப்படும்.எண்ணங்கள் உயர்வாக இருக்கும்போது அந்த எண்ணங்கள் நிறைவேறும்.அதனையே இந்த உள்ளுராட்சி சபையின் நடவடிக்கைகளில் நான் பார்க்கிறேன்.

கிழக்கு மாகாணத்தின் கேந்திரஸ்தானமாகவும் தலைநகரமாகவும் மட்டக்களப்பு உள்ளது.முதலாவது மாநகரசபையும் கூட.இந்த மாகாணத்தில் முன்மாதியாகவும் இருந்துவருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் அனைவரும் ஒன்று.நமக்கு மத்தியில் எந்த திரையும் இல்லை.நாங்கள் எதிலும் மாற்றம்பெறவில்லை.உணவு தொடக்கம் அனைத்திலுமே நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

அதனால் நான் கிழக்கு மாகாணம் தனித்திருக்கவேண்டும் என்று கூறினேன்.என்னை அந்த காலத்தில் தமிழர்களின் விரோதியாக சித்தரித்திருந்தனர்.

ஆனால் இன்று நான் பெருமிதம் அடைகின்றேன்.வடமாகாணத்தில் இருக்கின்ற அரசியல் தலைமைகள் கூட வடக்கும் கிழக்கும் இணைவது சாத்தியமில்லையென தெரிவித்திருக்கின்றனர்.இது எண்ணத்தில் இருக்கின்ற பிரச்சினை.நாங்களும் பிரியச்சொன்னது எண்ணத்தில் இருந்த பிரச்சினை.
இந்த மண்ணில் ஒன்றாக வாழ்ந்தவர்கள் ஒன்றாகவாழவேண்டும் என்ற எண்ணமே உள்ளது.எங்களுக்கு இங்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.யாரும் வந்து ஆளப்படும் சமூகமாக கிழக்கு மாகாண மக்கள் இருக்கதேவையில்லை.

நான் என்ன எண்ணம் கொண்டு நடந்தேனோ இது நடந்துகொண்டுசெல்கின்றது.அந்த எண்ணத்தினைக்கொண்டே சந்திரகாந்தன் அவர்களை முதலமைச்சராக்குவதற்கு ஒப்புதல்வழங்கினேன்.

அன்று தமிழர்களுக்கு துரோகியாக துரையப்பா இருந்ததாக சொன்னது போன்று முஸ்லிம்களுக்கு துரோகியாக என்னை காட்டினார்கள்.அவர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களோ முஸ்லிம்களோ ஆளமுடியும் என்ற யாதார்த்தத்தினை புரிந்துகொள்ளமறுத்துவிட்டனர்.

30ஆண்டுகளுக்கு முன்பிருந்தவற்றையும் அதன் பின்னர் இருந்தவற்றையும் கற்றுக்கொண்டவர்கள் நாங்கள்.இரு சூழலையும் நன்னு அனுபவித்தவர்கள் நாங்கள்.எமது அடுத்த சந்ததிக்கு எது சரியான வழியென்பதை சொல்லிக்கொடுப்பதற்கு எங்களைத்தவிர யாரும் இருக்கமுடியாது.

சிலவேளைகளில் போராட்டங்கள் தேவைதான்.போராட்டங்கள் வெற்றியளித்தும் உள்ளன.பல உலக தலைவர்களின் போராட்டங்கள் வெற்றியளித்துள்ளன.எண்ணத்தில் தூய்மை இருந்த காரணத்தினால் அவை வெற்றியளித்துள்ளது.ஆனால் நாங்கள் இந்த நாட்டிலே கண்டது எல்லாம் போராட்டம் என்ற பெயரில் சுயநல ரீதியான நடவடிக்கைகள்தான் நடத்தப்பட்டன.இல்லையென்றால் அந்த போராட்டம் தோற்றிருக்காது.

எந்தசமூகமும் எந்த பிராந்தியமும் எந்த குடும்பமும் தாங்கள் விடுதலையாவதற்கு,தாங்கள் வாழ்வதற்கு தங்களுக்கான சுய உரிமையை பெற்றுக்கொள்வதற்கு இதயசுத்தியான எண்ணங்களுடன் போராடுவதற்கு முன்வரும்போதே அந்த போராட்டம் சாத்தியமாகும்.இல்லையென்றால் அது தோற்றுப்போகும்.

நாங்கள் இன்று சந்தோசமாகவுள்ளோம்.அதேபோன்று எமது அடுத்த சந்திதியனரும் சந்தோகசமாக இருக்கவேண்டும்.வெறுமனே போராட்டம்,போராட்டம் என்று மீண்டும் மீண்டும் எம்மை தாக்குபவர்களாக நாங்கள் இருக்கமுடியாது.

நான் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கும்போது அந்த கட்சிக்கும் தேசிய காங்கிரஸ் என்றே பெயர் சூட்டினேன்.அங்கு தமிழ் முஸ்லிம் என்ற பேச்சுக்கு இடமில்லை.எனது முழு நோக்கமும் கிழக்கு மாகாணத்தினை மையமாகக்கொண்டதாகும்.கிழக்கு மாகாணத்தில் மூன்று சமூகங்களும் வாழ்கின்றோம்.மூன்று சமூகமும் ஒன்றுபட்டுவாழவேண்டும்.

தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்து முஸ்லிம்கள் நிம்மதியாக வாழவில்லையென்றால் அங்கு அமைதி வரப்போவதில்லை.முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்து தமிழர்கள் நிம்மதியாக வாழவில்லையென்றாலும் அங்கு அமைதிவரப்போவதில்லை.இரண்டு சமூகமும் நிம்மதியாக வாழ்ந்து சிங்களவர்கள் அமைதியாகவில்லையென்றால் நாங்கள் அமைதியாக இருக்கமுடியாது.அவ்வாறான பிணைப்பில் நாங்கள் உள்ளோம்.

இந்த நிலையில் நாங்கள் உள்ளத்தளவில் ஒன்றாக இருக்கவேண்டும் என்றுகொள்ளவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் நான் அழைப்பு விடுத்துள்ளேன்.ஒன்றாக அரசியல்செய்வதை பற்றி சிந்திங்கள் என்று.

கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிரிந்துபோயுள்ளதாக ஒருவெளிப்பாடு காட்டப்பட்டுள்ளது.அவ்வாறு நாங்கள் பிரியமுடியாது.அடித்தாலும் வெட்டினாலும் பிரிந்துவாழமுடியாது.அதுயாதார்த்தம் அல்ல.

எங்களுக்குள் இருக்கும் சிறியசிறிய பிரச்சினைகள் அல்லது பிரச்சினைகளாக காட்டப்படுபவைகளை பிரச்சினை உருவாவதற்கு காரணமாக இருக்கும் விடயங்களை தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் எம்மிடம் உள்ளது.

நான் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவனாக இருந்தாலும் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு என்னும்போது அந்த பெருமையில் நாங்களும் பங்குகொள்கிறோம்.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பே தலை நகரமாக இருக்கவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் நடுப்பகுதியில் அமைந்துள்ளதால் அனைவருக்கும் சேவைகளை பெற்றுக்கொள்வதில் இலகுவாக இருக்கும்.இந்த மாநகரசபைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நான் தயாரகவுள்ளேன்.

கிழக்கு மாகாணத்தில் அழகுபொருந்திய மாவட்டமாகவும் மக்கள் சந்தோசமாக வாழும் பிரதேசமாகவும் இந்த மட்டக்களப்பு உள்ளது.

No comments:

Post a Comment