Sunday, June 15, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுறுசுறுப்பாக இயங்காத அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படுவர்: மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன்!

Sunday, June 15, 2014
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுறுசுறுப்பாக இயங்காத அனைத்து அதிகாரிகளையும் இடமாற்;றுவதற்கோ அல்லது வெளிமாவட்டங்களுக்கு இடம்மாற்றுவதற்கோ ஆலோசிக்கப்பட்டுள்ளது. சுறுசுறுப்பாக இயங்கினால் தான் வறுமையை ஒழிக்க முடியும். மக்களும் அதிகாரிகளும் சேர்ந்து உழைப்பதன் மூலமே மாற்றத்தை கொண்டுவரமுடியும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் திவிநெகும வங்கியை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எங்கள் மாவட்டத்தில் சுறுசுறுப்பாக இயங்காத அனைத்து அதிகாரிகளையும் மாற்;றுவதற்கோ அல்லது வெளிமாவட்டங்களுக்கு இடம்மாற்றுவதற்கோ ஆலோசிக்கப்பட்டுள்ளது. சுறுசுறுப்பாக இயங்கினால் தான் வறுமையை ஒழிக்க முடியும். மக்களும் அதிகாரிகளும் சேர்ந்து உழைப்பதன் மூலமே மாற்றத்தை கொண்டுவர முடியும். ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இரவுபகலாக உழைத்துவருகின்றோம்.

கடந்த மாதம் மத்தியவங்கியின் அறிக்கையின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை ஒருவீதத்தினால் குறைந்துள்ளது. இது மிகவும் சந்தோஷமான விடயமாகும். இதன் மூலம் மாவட்ட ரீதியில் இருபதாவது இடத்திற்கு நாம் வந்துள்ளோம். நமக்குக் கீழே மொனராகலை ,முல்லைத்தீவு ,வவுனியா போன்ற மாவட்டங்கள் இருக்கின்றன.

சில இடங்களில் மக்கள்; வங்கிகளில் கடனை பெற்று தமது கடின உழைப்பின் மூலம் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திவருகின்றார்கள். எங்கள் மக்கள் மத்தியில் சோம்பேறித்தனம் காணப்படுவதால் அவர்களால் முன்னேறமுடியவில்லை. 1977ஆம் ஆண்டு சூறாவளியின் பின்னர் இலவசமாக பொருட்களை பெற்றுக்கொண்டுவருவதன் காரணமாக அவர்கள் மத்தியில்தாழ்வுநிலை ஏற்பட்டுவிட்டது.

அந்தக்காலத்தில் நாம் ஒரு வீட்டை கட்டுவதாயின் கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை சேமித்து அதன்மூலம் வீட்டை கட்டினோம். ஆனால் தற்போது எல்லாம் இலவசமாக கிடைத்துவருகின்றது. அனர்த்தம் ஏற்பட்டபின்னர் உதவிகள் செய்வதென்பதும் இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் தேவையான ஒன்றுதான். இருந்தாலும் நாம் தொடர்ந்து அதையே நம்பிக்கொண்டிருக்க முடியாது. இந்நிலையிலிருந்து விடுபட்டு நாம் சற்று வித்தியாசமாக சிந்திப்பதன் மூலமே மாற்றத்தை கொண்டுவர முடியும். அதற்குரிய அத்திவாரங்கள் மட்டும் இட்டுத்தரப்படும்.

கட்டியெழுப்பவேண்டியது உங்களின் பொறுப்பாகும்.
ஒரு பாடசாலையின் கல்விநிலையில் வளர்ச்சியின்மைக்கு பௌதீகவளப் பற்றாக்குறை மட்டுமே காரணம் என கூறமுடியாது. அந்தப்பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் சிறந்த முறையில் செயற்படாமையும் பெற்றோர்களின் ஊக்கமின்மையும் காரணமாக இருக்கலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்விவலயங்கள் இருக்கின்றன. அதில் முதல்நிலையிலிருப்பது முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி என்ற வலயமாகும். காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற பகுதிகளை உள்ளடக்கி எந்தவித பிரதேச தொடர்புமின்றி அரசியல் பலத்தால் மட்டும் உருவாக்கப்பட்ட அவ்வலயமே கடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றது.
 இரண்டாவது கண்டி நகரமாகும்.

மட்டக்களப்பு நகர பாடசாலைகளில் நல்ல முறையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நீங்கள் கருதினால் அது தவறாகும். அங்கும் குறிப்பிட்ட ஐந்து பாடசாலைகளை தவிர மற்றைய பாடசாலைகளில் கல்வி நிலை மிக மோசமாகவே இருக்கின்றது.

No comments:

Post a Comment