Monday, June 16, 2014

ஐ.நாவின் குழு இலங்கைக்குள் வந்து ஒருதலைப்பட்சமான விசாரணையை நடத்த முயல்வது ஒன்றும் தனிப்பட்ட பிரச்சி னையில்லை. மாறாக இதுவொரு தேசியப் பிரச்சினை!


Monday, June 16, 2014
இலங்கை::ஐ.நாவின் குழு இலங்கைக்குள் வந்து ஒருதலைப்பட்சமான விசாரணையை நடத்த முயல்வது ஒன்றும் தனிப்பட்ட பிரச்சி னையில்லை. மாறாக இதுவொரு தேசியப் பிரச்சினை என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட இந்த ஐ.நா. விசாரணைக்குழு உண்மைத் தன்மையுடன் செயற்படுமென்பதை எதிர்பார்க்க முடி யாது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் என்ற வகையில் திருமதி நவநீதம்பிள்ளை கடந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்தார்.

தனது விஜயம் தொடர்பில் பேரவையில் அறி க்கை சமர்ப்பித்த இந்த அம்மையார், பாரபட்சமான முறையி லேயே தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதாவது அறிக்கையொன்றை தயாரித்து வைத்துவிட்டே இலங்கை வந்தி ருந்தவர் போல அவரது செயற்பாடு அமைந்திருந்தது. அதேபோல்தான் ஐ.நா. விசாரணைக்குழுவின் வருகையையும் நாம் நோக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே முடிவுகளை ஒருபக்கச் சார்பாக எடுத்துவிட்டு இலங்கைக்குள் வந்து போலி அறிக்கை தயாரிப்பது தான் இந்தக் குழுவின் செயற்பாடாக இருக்கு மென்பதே அநேகரின் கருத்தாக இருக்கிறது.
 
ஆகவே, உண்மைத்தன்மை இல்லாத இந்தக் குழுவை இலங்கைக்குள் அனுமதிப்பது நாட்டின் இறைமைக்கும் நல்லிணக்க செயற்பாடுக ளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே அரசாங்கத்தின் நிலைப் பாடாகும் “சர்வதேச விசாரணைகளை இலங்கை எதிர்க்கவில்லை. குழுவின் விசாரணைகளில் உண்மை இருக்காது என்பதற்காகவே இலங் கைக்குள் வருவதை எதிர்க்கிறோம்” என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
 
இவருடைய இந்தக் கருத்து ஐ.நா குழுவை இலங்கைக்குள் அனுமதி ப்பது தவறு என்பதற்கான காரணங்களைத் தெளிவாக்குகிறது. என்றாலும், பொறுப்புள்ள ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தைப் பெறுவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை மிகவும் மெச்சத்தக்கதாகும். ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாதென கோரி அரசாங்கத் தரப்பினால் பாராளுமன்றத்தில் பிரேரணை யொன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் மீதான விவாதம் நாளையும் (17ம் திகதி) நாளை மறுதினம் (18ம் திகதி) நடைபெற்று வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
 
பிரேரணை வெற்றிபெறுவது நிச்சயமாகிவிட்டது. பாராளுமன்றம் இந்த நாட்டின் உயரிய சட்டவாக்கல் சபையாகும். அதற்கும் மேலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அவர்கள் மக்கள் பிரதிநிதிகளின் சபையாக இருக்கின்ற பாராளு மன்றத்தின் அங்கீகாரத்தையும் கருத்தையும் கோரி நிற்பது என்பது ஜனநாயக விழுமியத்தின் உச்ச வெளிப்பாடாகும். இந்த பிரேரணை தொடர்பில் பாராளுமன்றம் 18ம் திகதி எடுக்கின்ற தீர்மானம் சர்வதேச சமூகத்திற்கு ஒரு பலத்த செய்தியாக அமையும்.மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்றத் தினால் எடுக்கப்படும் தீர்மானத்தை மீறி எவரும் எதனையும் பல வந்தமாகச் செயற்படுத்த முடியாது.
 
ஆகவே தேசிய பிரச்சினை யென்ற ரீதியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் தயக்கம் காட்டாமலும் பின்வாங்காமலும் ஒத்துழைக்க வேண்டும். பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக ஜே.வி.பி. அறிவித்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் நாட்டு நலன் சார்ந்த வகையில் தங்களது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஐ.நா. விசாரணக்குழு இலங்கைக்குள் கால்வைக்க முயல்வது நாட்டின் நல்லிணக்கத்துக்கும் சமாதானத்திற்கும் பாதக நிலையை ஏற்படுத்தும் அதேநேரம் இறைமை, கெளரவ மேன்மைக்கும் சவால் விடுக்கும் நடவடிக்கையாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல் படுத்தி வருகிறது.
 
பரிந்துரைகளில் சுமார் 70 சதவீதம் அமுல் படுத்தப்பட்டுள்ளன. எஞ்சியவைகளும் கட்டம் கட்டமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. யுத்தத்தின் இறுதிப் பகுதியில் நடந்ததாக கூறப்படும் மனிதவுரிமை மீறல் சம்பவங்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகள் முன்னெடு க்கப்பட்டு வரும் நிலையில் சர்வதேச விசாரணையென்ற போர்வையில் ஒரு நாட்டின் தன்னாதிக்கத்திலும் சுதந்திரத்திலும் கைவைக்க முயல்வதை எவ்வகையிலும் ஏற்க முடியாது. பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த கையோடு இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீமூன் ஒப்பந்த மொன்றிலும் கைச்சாத்திட்டார்.
 
உள்ளக விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றே அதில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் சர்வதேச விசாரணைக் குழுவொன்றை இங்கு அனுப்பி இயல்பு நிலையைக் குழப்ப முயல்வதை ஏற்கமுடியாது. ஆகவே இலங்கையர் என்ற நிலைப்பாட்டுடன் பிரேரணை வெற்றிபெற சகலகட்சிகளும் முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment