Sunday, June 29, 2014

இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பாக்.தீவிரவாதிகளை கட்டுப்படுத்த இலங்கை தீவிர கண்காணிப்பு!

Sunday, June 29, 2014
இலங்கை::இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த இலங்கை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நின்றிருந்த அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 வெடிகுண்டுகள் வெடித்தன. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது என்று விசாரணையில் தெரியவந்தது.
 
மேலும் அவர்கள் இலங்கை மற்றும் மாலத்தீவு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்றும் உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டது. இந்தத் தாக்குதலில் தொடர் புடைய மலேசியாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த ஷாகீர் உசைன் இதேபோல் இந்தியாவுக்கு 20 முறை வந்து சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அவனிடம் நடைபெற்ற விசாரணையில், பெங்களூர் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள், சென்னையில் உள்ள விமானநிலையம் மற்றும் அணுஉலை நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் நடத்திய சதி திட்டமும் வாக்குமூலத்தின் மூலம் அம்பலமானது.
 
இதற்காக மாலத்தீவு மற்றும் இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் ஏற்கனவே இந்தியாவில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை படம் பிடித்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அனுப்பிய தீவிரவாதியும் பிடிப்பட்டான். இதனால் இலங்கை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் பாகிஸ்தானியர்களை கண்காணிக்க இந்தியா, இலங் கைக்கு கோரிக்கை விடுத்தது.
 
மேலும் தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இலங்கைக்கு வரும் பாகிஸ்தானியர்களின் விசாக்களை இலங்கை அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களின் விசாக்களை ரத்து செய்து, அவர்களை இலங்கை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment