Monday, June 9, 2014

உக்ரைன் அதிபராக போரோஷென்கோ பதவியேற்பு!

Monday, June 09, 2014
கீவ்::உக்ரைன் அதிபராக பெட்ரோ போரோஷென்கோ பதவியேற்றார். பின்னர் அவர் நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்டுவது எனது தலையாய பணி என்று தெரிவித்தார்.
 
ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் கையெழுத்திட மருத்ததை தொடர்ந்து அவருக்கு எதிராக கடந்த ஆண்டு போராட்டம் வெடித்தது. தலைநகர் கீவில் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள் அளித்த நெருக்கடியை தொடர்ந்து எதிர்ப்பாளர்களின் பிரதிநிதியுடன் விக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
அப்போது உக்ரைனின் அதிபர் தேர்தலை மே 25-ஆம் தேதிநடத்தவும் அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவும் அவர் ஒப்புக் கொண்டார். எனினும், எதிர்பாளர்களின் போராட்டம் நீடித்ததால், விக்டர் நாட்டைவிட்டு வெளியேறினார். இடைக்கால அதிபராக அலெக்சாண்டர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் திட்டமிட்டப்படி அதிபர் தேர்தல் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட சாக்லேட் நிறுவன அதிபர் பெட்ரோ பரோஷென்கோ 54.7 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றார். அதைத் தொடர்ந்து தலைநகர் கீவில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விழாவில் உக்ரைனின் 5-வது அதிபராக போரோஷென்கோ பதவி ஏற்றுக்கொண்டார்.
 
அப்போது அவர் கூறுகையில், உக்ரைனின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், ரஷ்யாவுடனான பிரச்னைக்கு தீர்வு காணவும் முன்னுரிமை கொடுப்பேன். ஐரோப்பிய யூனியனுடனான ஆதரவு நிலை தொடரும். அதற்காக ரஷ்யாவுடன் எத்தகைய சமரசத்துக்கும்இடமில்லை. பிரான்ஸின் நார்மண்டியில் படை வீரர்கள் நினைவுத் தினத்தின் போது , ரஷ்யா அதிபர் புடினிடம் கிரீமியா மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளேன். என்றார். இந்த  பதவியேற்பு விழாவில், அமெரிக்க துணைத் தலைவர் ஜோபிடன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
இதனிடையே கீவில் செய்தியாளர்களிடம் உக்ரைன் இடைக்கால உள்துறை துணை அமைச்சர் ஜெர்ரி கூறுகையில், உக்ரைன் கிழக்குப் பகுதியிலுள்ள ஸ்லாவ்யான்ஸ்க் நகரில் ஒரு சோதனைச் சாவடி அருகே கிளர்ச்சியாளர்கள் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 2 போலீசார் காயமடைந்தனர் என்றார். மேலும், ஸ்லாவ்யான்ஸ்க் நகரின் அருகே ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்ததியதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment