Wednesday, June 18, 2014

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைவரிசை ஈராக்கில் வேலை பார்த்த 40 இந்தியர்கள் கடத்தல் இந்திய தூதர் பாக்தாத் விரைகிறார்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
Wednesday, June 18, 2014
பாக்தாத்: ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தை கைப்பற்ற தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மொசூல் நகரத்தில் இருந்து 40 இந்தியர்களை கடத்தி  அவர்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இந்தியாவில் இருந்து முன்னாள் தூதர் சுரேஷ்  ரெட்டி விரைந்துள்ளார்.

அல்கய்தாவின் ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பு, சிரியாவின் ஆதரவுடன் ஈராக்கை கைப்பற்றும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளது. இந்த தீவிரவாதிகள் ஈராக்கில் உள்ள சன்னி பிரிவினரின் உதவியுடன் ஈராக்கில் உள்ள மொசூல், திக்ரித், ஜாதியா, ஜலாலா போன்ற முக்கிய  நகரங்களை கைப்பற்றியுள்ளனர். ஈராக் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அங்கு பீரங்கி மற்றும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. நகரங்களில்  ஆங்காங்கே குண்டுகள் வெடித்து தீப்பற்றி எரிகின்றன. இதனால் மொசூல் உள்ளிட்ட நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி  வருகின்றனர்.ஈராக்கிற்கு உதவ அமெரிக்காவின் போர்க்கப்பல் விரைந்துள்ளது. அண்டை நாடான ஈரானும், ஈராக் ராணுவத்திற்கு உதவ தயாராகி வருகிறது.  இதற்கிடையில் ஈராக்கில் உள்ள ஷியா மற்றும் துருக்கியர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தனியாக படைகளை உருவாக்கி தீவிரவாதிகளுக்கு எதிராக  சண்டையிட தயாராகி வருகின்றனர்.

முக்கிய நகரங்களை கைப்பற்றிய தீவிரவாதிகள், தற்போது தலைநகர் பாக்தாத்தை கைப்பற்ற முன்னேறி வருகின்றனர். அவர்களின் தாக்குதலை முறியடிக்க  ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈராக் ராணுவத்தில் இணைந்து எதிர்த்து போரிட தயாராகி வருகின்றனர். மேலும் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கா, இந்தியா  உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களுக்கும் பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈராக் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் நாடு என்ற போதிலும்,  அதிபர் சதாம் உசேனின் சன்னி பிரிவு தீவிரவாதிகள் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பிறகு மீண்டும் ஈராக்கை கைப்பற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்கிடையில் ஈராக்கில் நடைபெற்று வரும் சண்டை காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோலிய சந்தை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை  உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈராக்கின் நிலைமையை உற்று கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.இந்நிலையில், மொசூல்  நகரத்தில் இருந்து 40 இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை  கிடைக்கவில்லை. ஈராக்கில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஆந்திரா,  தமிழகத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்களும் இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவின் பேரில் ஹெல்ப் லைன்  தொலைபேசி எண் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்க தெலங்கானா செயலாளர் ராஜிவ் சர்மா வெளியுறவுத்துறை அமைச்சகத்தோடு  பேசி வருகிறார்.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள இந்தியர்கள் நிலை குறித்து நடவடிக்கை எடுக்க தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஈராக்கில் உள்ள நிலை குறித்து ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒருமுறை தகவல்கள் பெறப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கவும்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு போதிய பாதுகாப்பும், வசதியும் செய்யப்படும்  என ஈராக் அரசு உறுதி அளித்துள்ளது. மொசூல் நகரத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட இந்தியர்கள் நிலை குறித்து கண்டறிவதற்காக, டெல்லியில் இருந்து ஈராக்  நாட்டில் முன்பு இந்திய தூதராக பணியாற்றிய சுரேஷ் ரெட்டி இன்று காலை பாக்தாத்துக்கு விரைந்துள்ளார்.இதுகுறித்து தூதரக செய்தி தொடர்பாளர் சையது  அக்பருதீன் கூறுகையில், ‘இந்தியர்கள் 40 பேர் கடத்தப்பட்டது இன்னும் உறுதியாகவில்லை. எனினும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ள  தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் சரியான இடத்தை கண்டறிய முடியவில்லை’ என்றார்.ஈராக்கில் திக்ரித் நகரிலும் சுமார் 46 இந்திய  நர்சுகள் தவித்து வருவதாக தெரிகிறது. அவர்களில் 14 பேர் வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் அங்கேயே தவித்து வருகின்றனர். ஈராக்கில் தவித்து  வரும் இந்தியர்களை மீட்க தேசிய பாதுகாப்பு செயலாளர் ஏ.கே.தோவால் தலைமையில் தூதர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment