Friday, May 30, 2014

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனுக்கு ஆளுநர் ரோசய்யா கவுரவ விருது வழங்கினார்!

Friday, May 30, 2014
சென்னை::காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனுக்கு ஆளுநர் ரோசய்யா கவுரவ விருது வழங்கினார். விருதை முகுந்த் வரதராஜனின் மனைவி பெற்றுக்கொண்டார்.
 
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப் பிரிவில் பணியாற்றிய சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் (31) வீரமரணம் அடைந்தார். அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையில் விருது வழங்குவதற்கான விழா சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹாலில் வியாழக்கிழமை நடந்தது. கவுரவ விருதை மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரபேக்கா வர்கீஸிடம் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினார்.
 
விழாவில் ஆளுநர் ரோசய்யா பேசியதாவது:
 
இந்திய ராணுவம் உலகின் 2-வது பெரிய ராணுவம். நமது ராணுவ வீரர்கள் தமது இன்னுயிரைப் பணயம் வைத்து எல்லையைப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றனர். அவர்களது தைரியமும் தியாகமும் உலகப்புகழ் பெற்றுள்ளது. மெட்ராஸ் ரெஜிமென்ட் 1950-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமைக்கப்பட்டது. நமது ராணுவத்திலேயே அதுதான் பழமையானது. தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்ப்பதற்கான அனைத்தும் இந்திய ராணுவத்திடம் இருக்கிறது.
 
வீரர்களைப் போற்றுவோம்’
 
முகுந்த் வரதராஜனுக்கு மொத்த நாடும் மரியாதை செய்கிறது. காஷ்மீரில் அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விட்டு தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட அவர் சென்றார். நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அவர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றோர், உயிர்த் தியாகம் செய்தோருக்கு நாம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்.
 
இவ்வாறு ரோசய்யா கூறினார்.
 
தென் பிராந்திய ராணுவ ஜெனைரல் ஜக்பீர் சிங் பேசுகையில், ‘‘முகுந்த் வரதராஜனின் குழந்தை அர்ஷியாவின் கல்விக்கும் அவரது மனைவி மற்றும் குடும்பத்துக்கும் ராணுவம் என்றென்றும் துணை நிற்கும்’’ என்றார். இந்த விழாவை ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்தது. அதன் தலைவர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment