Wednesday, April 30, 2014

மலேசிய முதலீட்டாளர்களை வட கிழக்கில் முதலிடுமாறு: ரவூப் ஹக்கீம் கோரிக்கை!

Wednesday, April 30, 2014
இலங்கை::தற்பொழுது மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு (அம்னோ) செயலாளர் நாயகமும், சமஷ்டி எல்லைப்புற அமைச்சருமான தெங்கு அத்னான் மன்சூரை கோலாலம்பூரில் உள்ள அதன் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

 
அமைச்சர்கள் இருவரும் தத்தமது நாடுகளின் அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தனர். மலேசிய அமைச்சர் மன்சூர் கருத்துத் தெரிவிக்கும் போது, கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களின் பெறுபேறுகள் பற்றிக் குறிப்பிட்டதோடு, அந்தத் தேர்தல் முடிவுகள் அரசின் பல்வேறு துறைகளிலும் சீர்திருத்தங்கள் தேவையென்பதை உணர்த்தின என்றும் கூறினார்.
 
அத்துடன் கடுமையான சட்டங்கள் பல நீக்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் அரசியலில் பெரும் உந்து சக்தியாகவுள்ள இளைஞர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
தீவிரவாதத்திற்கும் சமய கருத்துக்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் நிகழா வண்ணம் சம நிலையைப் பேணுவதில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
 
மூன்று தசாப்த காலம் நீடித்த இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னணியில், வடகிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அங்கு முதலீடுகளை மேற்கொள்ள அமைச்சர் ஹக்கீம் மலேசிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறும் அந் நாட்டு அமைச்சரிடம் வேண்டுகோளொன்றை விடுத்தார்.
 
அத்துடன், இரு நாடுகளும் பயன்பெறக் கூடிய விதத்தில் இளைஞர் யுவதிகளுக்கான பரிமாற்ற செயல்திட்டமொன்றின் சாத்தியக்கூறுகள் பற்றிப் பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
 
தற்பொழுது கணினி தொழில்நுட்பத்தில்  பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 25 பேருக்கு பயிற்சி அளித்துவரும் நிறுவனங்களுக்கும் அரசியல் அமைப்புக்களுக்கும் அம்னோ அமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக மலேசிய அமைச்சர் கூறினார்.
 
இரு நாடுகளுக்கும் இடையில் ஆட்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புகள் குறித்தும் அமைச்சர்கள் இருவருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்.
 
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் – ஊடகச் செயலாளர்

No comments:

Post a Comment