Wednesday, April 23, 2014

வடக்கு மாகாண சபை உறுப்பினராக ஈ.பி.டி.பி கட்சியின் சி.தவராஜா இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம்!


Wednesday, April 23, 2014
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடக்கு மாகாண சபை உறுப்பினராக ஈ.பி.டி.பி கட்சியின் சி.தவராஜா இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கமலேந்திரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால் அவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் ஈ.பி.டி.பியின் நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவரான றெக்சியனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
 
இதனால் ஈ.பி.டி.பி. கமலேந்திரனை தமது கட்சியை விட்டு நீக்கியது. அதன் தொடர்ச்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அவரை நீக்கியது. இதனால் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து கமலேந்திரன் நீக்கப்படுகின்றார் என்றும் அந்த இடத்துக்கு சி.தவராஜா நியமிக்கப்படுகின்றார் என்றும் ஐ.ம.சு.மு. செயலாளரால் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டது.
 
அதனையடுத்து வர்த்மானி அறிவித்தல் மூலம் புதிய உறுப்பினராக சி.தவராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் அவர் வடக்கு மாகாண சபை உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment