Tuesday, April 22, 2014

பொதுநலவாய அமைப்புக்கு வழங்கப்படும் நிதி இடைநிறுத்தும் கனேடிய அரசாங்கத்தின் தீர்மானம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி!

Tuesday, April 22, 2014
இலங்கை::பொதுநலவாய அமைப்புக்கு வழங்கப்படும் நிதியை, இடைநிறுத்தும் கனேடிய அரசாங்கத்தின் தீர்மானம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அறிக்கையொன்றின் ஊடாக இந்த வேண்டுக்கோளை விடுத்துள்ளது.
 
கனேடிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பாதிப்பை ஏற்படுத்துவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
வடக்கு மற்றும் கிழக்கில் குறிப்பாக, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களே யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு, தமது சொத்துக்களை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் கனடா வழங்கிய  உதவிகளுக்கு இலங்கைவாழ் மக்கள் நன்றியோடு இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
கொழும்பில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கனடா பங்கேற்காமை, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொன்னான வாய்ப்பினை, நாம் தவறவிட்டுள்ளமை கவலையளிப்பதாகவும் வீ.ஆனந்தசங்கரி தெரிவிக்கின்றார்.
 
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு கனடா வருகைதந்திருக்கும் பட்சத்தில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுடன் இணைந்து, நாட்டின் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய்ந்திருக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
 
இவ்வாறான மாநாடொன்றிலேயே தென்னாபிரிக்காவின் இனப் பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டு, அதற்கான தீர்வு பிரித்தானியாவில் எட்டப்பட்டதாக அவர் கூறினார்.
 
இந்தியா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு கனடா முயற்சிக்கும் என தான் நம்பி ஆறுதலடைவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment