Thursday, April 17, 2014

தமிழக- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை தமிழக அரசு மீது சோனியா குற்றச்சாட்டு!

Thursday, April 17, 2014
நாகர்கோவில்::தமிழக- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு, மத்திய அரசு ஏற்பாடு செய்த போது மாநில அரசு தாமதப்படுத்தியது,'' என,கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்., தலைவர் சோனியா குற்றம்சாட்டினார்.

அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட போதும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் வகையில், ஐ.மு., கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது.வறுமைக்கோடுக்கு கீழே வாழ்ந்த 40 கோடி பேரின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது; அவர்களுக்கு கல்வி, வேலை, உயர்கல்வி, தொழில், மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்பட்டன. மலைவாழ் மக்கள், சிறுபான்மையினர், பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது.தமிழகத்தில் நல்ல திட்டங்களை மத்திய அரசு தந்துள்ளது. ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் ஏராளமானோர் பயன் பெற்றுள்ளனர்.மகளிர் குழுவினருக்கு 77 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 55 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை, மத்திய அரசு கொண்டுவந்தது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் கொண்டு வந்தோம்.இந்தியாவுக்கு இரண்டாவது சுதந்திரமாக, தகவல் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 'கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் எதுவும் செய்யவில்லை' என, சிலர் பொய்ப் புகார் கூறுகின்றனர். எந்த அரசும் செய்யாத சாதனையை, ஐ.மு., கூட்டணி அரசு செய்துள்ளது.

'இலங்கைத் தமிழ் சகோதரர்களுக்கு, காங்., அரசு எதுவும் செய்யவில்லை' என, கூறுகின்றனர். இலங்கைத் தமிழர்களின் நன்மைக்காக பாடுபட்ட ராஜிவ் ரத்தம் சிந்தியதை மறுக்க முடியுமா? இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வை, மத்திய அரசு உறுதி செய்துள்ளது; தமிழர்கள் வாழும் பகுதியில் ரோடு, தண்டவாளம், பள்ளிகள் அமைக்கவும் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணவும் காங்., நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்களின் துயரத்தை, மத்திய அரசு நன்கு உணர்ந்துள்ளது. கைது செய்யப்படும் மீனவர்களையும், படகுகளையும் மீட்பதில் மத்திய அரசு வேகமாக செயல்பட்டது.தமிழக- இலங்கை மீனவர்களை சென்னையில் சந்தித்து பேச நடவடிக்கை எடுத்தது, மத்திய அரசு. ஆனால், அதற்கு அனுமதி தராமல் அ.தி.மு.க., அரசு தாமதம் செய்தது என, நான் பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். மதவாதம், அரசியல் ஆதிக்கம், பணபலம் சேர்ந்து இத்தேர்தலை ஆட்டிப்படைக்கிறது. பா.ஜ., மதத்தின் பெயரால் பிரித்தாள பார்க்கிறது.

பா.ஜ., இன்று தனி நபரிடம் சிக்கிக் கொண்டுள்ளது. 'அந்த நபர்' இந்தியாவின் எல்லா பிரச்னைக்கும், தன்னிடம் தீர்வு இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனி நபரிடம் இந்த நாடு போய்விடக்கூடாது. நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்காக இந்திராவும், ராஜிவும் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்; அவர்களின் தியாகம் வீண் போகக்கூடாது.இந்தியா என்பது பெரிய தத்துவம்; அதை, எந்த தியாகம் செய்தாவது முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் காங்., தனித்து விடப்பட்டதாக கூறினர்; இங்குள்ள கூட்டத்தை பார்க்கும் போது, மக்கள் காங்கிரசுடன் இருப்பதை உணர்த்துகிறது.காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் தரப்படும். முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்கப்படும்; வாக்குறுதியை காங்., நிறைவேற்றாமல் இருந்ததில்லை.தமிழகத்தில் இரட்டை ரயில் பாதை, மீனவர் மற்றும் வனப்பகுதியில் வசிப்போருக்கு பாதுகாப்பு, கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் மத்திய பல்கலை போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். எங்களை மக்கள் ஆதரிக்கும் பட்சத்தில், மத்தியில் இளைமையான - வலிமையான- நிரந்தமான அரசு உருவாகும்.இவ்வாறு அவர் பேசினார்.


கார்த்திக் நையாண்டி

சோனியா வருவதற்கு முன் மொட்டை வெயிலில் காத்திருந்த தொண்டர்களை பார்த்து நடிகர் கார்த்திக் கை அசைத்தார். அவரை பேச ஞானதேசிகன் அனுமதித்தார்.
 
கார்த்திக் பேசுகையில், "இந்தியா, இந்தியாவாக இருக்க வேண்டுமானால் காங்., கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும். நாட்டை துண்டாட நினைக்கும் கட்சியை ஆதரிக்கக்கூடாது,” என பத்து நிமிடங்கள் பேசினார். பின், அவராகவே, "நான் விட்டால் பேசி கொண்டே இருப்பேன். எனவே, என் பேச்சை இத்துடன் முடித்து கொள்கிறேன்,” என கூறி விட்டு, மேடையை விட்டு இடம் பெயர்ந்தார்.
தழுதழுத்த குரல்

டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு, சோனியா வந்தார். பின், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு வந்தார். கூட்ட மேடை வழியாக சென்ற ஹெலிகாப்டரை பார்த்து தொண்டர்கள் கையசைத்தனர். மேடைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்தார். 12.40 மணிக்கு ஆங்கிலத்தில் பேசி, மதியம் 1.10 மணிக்கு முடித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பீட்டர்அல்போன்ஸ் மொழி பெயர்த்தார்."இலங்கைத் தமிழர்களுக்காக ராஜிவ் உயிர்த் தியாகம் செய்தார்,” என சோனியா பேசியபோது குரல் தழுதழுத்தது. அவர், 1.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.

அதிர்ச்சி வாலிபர்
சோனியா பேசிக் கொண்டிருந்தபோது, மேடையின் வலதுபுறம் புதருக்குள் இருந்த பனை மரத்தில் வாலிபர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் ஏறினார்.அவரை தடுத்த நிறுத்த போலீசாரால் முடியவில்லை. இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பனை மரத்தில் இருந்தபடி சோனியாவை பார்த்து அவர் கையை காட்டினார். அந்த 'குசும்புக்கார' வாலிபரை, சோனியா மிரட்சியுடன் பார்த்தார். பின், பேச்சை தொடர்ந்தார். போலீசார் வருவதை பார்த்த வாலிபர் ஏறிய வேகத்தில் கீழே இறங்கி மாயமானார்.
 
மன்னிப்பு கேட்ட ஞானதேசிகன்

கன்னியாகுமரி முருகன்குன்றம் மைதானத்திற்கு, காலை 9 மணியில் இருந்து தொண்டர்கள் வரத்துவங்கினர். கூட்டம் இல்லாதது போல், காலியாக இருந்த சேர்களை காட்டி, சில 'டிவி'க்களில் ஒளிபரப்பினர். கொதிப்படைந்த காங்., தலைவர் ஞானதேசிகன், "இப்போது கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதை தயவு செய்து ஒளிபரப்பு செய்ய வேண்டும்,” என கேட்டுக்கொண்டார்.பின், கடும் வெயிலில் காத்திருந்த தொண்டர்களை பார்த்து, "ஆந்திர மாநிலம் கரீம்பூரில் இன்று (நேற்று) மாலை 4 மணிக்கு பேச இருப்பதால், காலையில் கன்னியாகுமரி கூட்டத்தில் சோனியா பங்கேற்கிறார். இதன் காரணமாகவே, உங்களை வெயிலில் காக்க வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அதற்காக என்னை மன்னிக்க வேண்டும்,” என்றார்.
 
சோனியா மேடைக்கு வந்த பின் வரவேற்று பேசிய ஞானதேசிகன், "இந்த கூட்டம் யாராலும் அழைத்து வரப்படவில்லை. அதுவாகவே வந்த கூட்டம். எனவே, இந்த தேர்தலில் காங்கிரஸ் உறுதியாக வெற்றி பெறும் என உறுதி தருகிறேன், என சோனியாவை பார்த்து, ஞானதேசிகன் ஆங்கிலத்தில் பேசினார்.

No comments:

Post a Comment