Friday, April 25, 2014

ஆப்கன் மருத்துவமனையில் 3 அமெரிக்கர்கள் சுட்டு கொலை!

Friday, April 25, 2014
காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க அறக்கட்டளை நடத்தும் கியூர் சர்வதேச மருத்துவமனை உள்ளது. இங்கு வெளிநாட்டினர் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் ஒரு மருத்துவர் உள்பட 3 அமெரிக்கர்களை ஆப்கன் போலீஸ்காரர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். சம்பவ இடத்திலேயே 3 பேரும் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
ஆப்கன் போலீஸ்காரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையில் 7 ஆண்டுகளாக பணிபுரிந்த மருத்துவர் உள்பட சிகிச்சை பெற வந்த அமெரிக்க தந்தை மற்றும் மகன் பலியாகி உள்ளனர். 'இறந்துபோன 3 அமெரிக்கர்களின் குடும்பத்தினருக்கும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்' என்று அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் காத்லீன் ஹெய்டன் கூறினார்.
 
துப்பாக்கி சூடு நடத்திய ஆப்கன் போலீஸ்காரர் பதில் தாக்குதலில் காயம் அடைந்தார். அவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் ஆப்கன் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டதில் வெளிநாட்டு பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் பலியானார். கனடா பத்திரிகையாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதேபோல் காபூலில் வெளிநாட்டினரை தாக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment