Saturday, April 19, 2014

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் மூவர் விடுதலையா? 25ம் தேதிக்குள் தீர்ப்பு: சதாசிவம் பேட்டி!

Saturday, April 19, 2014
மதுரை:: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலையாவார்களா? என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும். இது தொடர்பான வழக்கில் 25ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரம் செய்த போது புலிகளின்  மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த கொலை தொடர்பான வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 
 
இதையடுத்து அவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த கருணை மனுக்கள் மீது தாமதமாக முடிவெடுக்கப்பட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கருணை மனு மீது தாமதமாக முடிவெடுக்கப்பட்டதால் அதையே காரணம் காட்டி மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் இந்த மூவரை விடுதலை செய்வது பற்றி மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கோர்ட் தெரிவித்தது. 
 
இதையடுத்து மறுநாள் தமிழக சட்டமன்றத்தை கூட்டிய முதல்வர் ஜெயலலிதா முருகன், சாந்தன்,பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர் கெடுவும் விதித்தார். ஆனால் மத்திய அரசோ தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து மேற்கண்ட நபர்கள் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தற்போது முடிந்து விட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் நேற்று கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் முருகன் உள்ளிட்ட மூவர் விடுதலையாவார்களா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சதாசிவம் இன்னும் ஒரு வாரம் பொறுங்கள். இந்த வழக்கு விசாரணை முடிந்து விட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படும். அப்போது உங்களுக்கு தானாகவே தெரிந்து விடும். காரணம், நானாக எதையும் தற்போது சொல்லக் கூடாது என்று தெரிவித்தார். எனவே இந்த வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாகும். அப்போது முருகன் உள்ளிட்ட மூவர் விடுதலையாவார்களா என்பது தெரிந்து விடும். 

No comments:

Post a Comment