Thursday, March 13, 2014

ஸ்டாலின், விஜயகாந்த் நாளை பிரசாரம் சூடுபிடிக்கிறது மக்களவை தேர்தல்!

Thursday, March 13, 2014
சென்னை::திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் நாளை பிரசாரத்தை தொடங்குகின்றனர். முதல்வர் ஜெயலலிதா  ஏற்கனவே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதிமுக தனித்து போட்டியிடுகிறது.  திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.  பாஜ கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்கு தேசிய மக்கள் கட்சி, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. எனினும், தொகுதி  பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருவதால், இக்கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை.

 இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா கடந்த 3ம் தேதி காஞ்சிபுரத்தில் தனது பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அவர் தினமும் சென்னையில் இருந்து  விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று ஒன்று அல்லது 2 தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். இன்று ஈரோடு தொகுதிக்குட்பட்ட
காங்கேயத்தில் பிற்பகலில் பிரசாரம் செய்தார். மாலையில் திருப்பூரில் பிரசாரம் செய்கிறார். இரவே சென்னை திரும்பும் அவர் நாளை ஓய்வெடுக்கிறார். மீண்டும்  15ம் தேதி தூத்துக்குடியில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தை நாளை, கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தொடங்குகிறார். இதற்காக இன்று மாலை 5.30 மணிக்கு  சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து சேருகிறார். அங்கு இரவு ஓய்வெடுக்கும் அவர் நாளை 14ம் தேதி கன்னியாகுமரி மக்களவை  தொகுதி திமுக வேட்பாளர் எப்.எம்.ராஜரத்தினத்தை ஆதரித்து களியக்காவிளையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 3 மணிக்கு  களியக்காவிளை வரும் அவருக்கு குமரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்யும் அவர், இரவு 7 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறுகின்ற  பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.  பின்னர், நெல்லைக்கு சென்று தங்குகிறார். நாளை மறுநாள் நெல்லை, தென்காசி தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தும் நாளை மாலை 3 மணிக்கு திருவள்ளூர் தொகுதி கும்மிடிப்பூண்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர்,  வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூரிலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பல்லாவரத்திலும் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து அவர் வரும் 27ம் தேதி வரை  பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜ அணிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இந்த அணிகள் பிரசாரத்தை  தொடங்கி விட்டதால், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment