Tuesday, March 11, 2014

தமது இருப்புக்களை தக்கவைத்துக் கொள்வதற்காக நவிபிள்ளை போன்றவர்களின் தீர்மானங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்: சிவகீதா!

Tuesday, March 11, 2014
இலங்கை::தமது இருப்புக்களை தக்கவைத்துக் கொள்வதற்காக நவநீதம்பிள்ளை போன்றவர்கள் எமது தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானங்களை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்  என மட். மாநகரசபை முன்னாள மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் சுயலாப நோக்கமே ஜெனிவாவில் எமது இலங்கை தேசத்திற்கு எதிரான தீர்மானம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இன்று ஒரே நாடு ஒரே தேசம் என்ற குடையின் கீழ் மூன்று இனங்களும் சுதந்திர காற்றை சுவாசித்து வருகின்றன.

சமாதானத்துடனும், மகிழ்வுடனும் ஒற்றுமையுடனும் வாழும் இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் எமது இலங்கைத் தேசத்தின் இறைமைக்கும், ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படுத்தும் வண்ணம் திட்டமிட்ட வகையில் தீர்மானமானங்களை முன்வைத்திருக்கின்றன.

அந்நாடுகளின் ஏகாதிபத்திய சுயரூபத்தினை தமது இருப்புகளுக்காக சர்வதேச அரங்கில் திணிக்க முயல்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
கடந்த முப்பது வருடகாலமாக புலிப்பயங்கரவாதிகளின் ஏகாதிபத்தியத்திற்குள் இருந்த நாம் அதிலிருந்து விடுபட்டு இன்று சமாதான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது அரசானது இந்நாட்டில் வாழும் மூவின மக்களுக்கும் சமஉரிமைகளை வழங்கியுள்ளது. நாங்கள் பிறந்ததிலிருந்து இந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இன்று எமது ஜனாதிபதி அவர்கள் இருண்ட யுகத்தில் இருந்த எம்மை ஒளிமயமான காலத்திற்கு கொண்டு வந்திருக்கின்றார்கள். அதனை நாங்கள் நன்கு உணர்கின்றோம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர் என்ற வகையில் நான் அதனை விசேடமாக உணர்கின்றேன்.

எமது தேசத்தைச் சேர்ந்த தேசப்பற்றற்ற சில துரோகிகளும் எமது இலங்கை தேசத்திற்கு எதிரான திட்டமிட்ட இச்சதி வலையில் சிக்கியுள்ளனர்.
இவ்வாறானவர்கள் யதார்த்தத்தை உணரவேண்டும். எமது தேசத்திற்கு அபகீர்த்தியை உண்டாக்குவதற்கு ஒருபோதும் அவர்கள் இடமளிக்கக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment