Monday, February 24, 2014
சென்னை:::ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க, பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்,'' என, மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார். சென்னை,
ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி, எண்ணூர்
துறைமுகத்திற்கு, காமராஜர் பெயர் சூட்டும் விழா நடக்கிறது. இந்த விழா
நடைபெறும் இடத்தை, மத்திய அமைச்சர் வாசன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது, இந்திய கப்பல் மாலுமிகள் நல வாரியத்தின் உறுப்பினர் கஜநாதன் மற்றும் துறைமுக அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது,
வாசன் அளித்த பேட்டி: இந்தியாவில் உள்ள துறைமுகங்களில், மினிரத்னா
அந்தஸ்து பெற்ற துறைமுகமாக, எண்ணூர் துறைமுகம் விளங்கி வருகிறது. சர்வதேச
நாடுகளுடன், வர்த்தகம் செய்கிற துறைமுகமாகவும் திகழ்கிறது. இந்த
துறைமுகத்திற்கு, காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என, மத்திய கப்பல் துறை
அமைச்சகம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதற்கான, பெயர்
சூட்டு விழா, இம்மாதம், 26ம் தேதி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.,
மைதானத்தில் நடக்கிறது. ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வது என்பது, தவறான
முன் உதாரணத்திற்கு வழி வகுக்கும்.
ராஜிவ் கொலையை, காஷ்மீர் முதல்,
கன்னியாகுமரி வரையில் இருக்கின்ற காங்கிரஸ் தொண்டர்கள் மறக்கவும்
மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி
வைக்க வேண்டியது, மத்திய அரசின் கடமை. அந்த கடமை, மாநில அரசுக்கும் உண்டு.
அதன் அடிப்படையில், அவர்களை விடுவிப்பது தவறானது. எனவே, மறுபரிசீலனை செய்ய
வேண்டும். ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை, பொதுமக்கள்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம், சாதாரண குற்றவாளிகள் என்பது வேறு;
வெளிநாட்டில் இருந்து வந்து, பயங்கரவாதம் மூலம், நாட்டின் மிகப்பெரிய
தலைவரையும், போலீஸ் அதிகாரிகளையும் கொலை செய்த குற்றவாளிகள் என்பது வேறு.
எனவே, அவர்களின் விடுதலையை அனுமதிக்க முடியாது. தேர்தல் கூட்டணிக்கு
இன்னும் கால அவகாசம் இருக்கிறது. இவ்வாறு, வாசன் கூறினார்.

No comments:
Post a Comment