Wednesday, February 12, 2014

இலங்கை மீனவர் படகுகளை விடுவிக்க தமிழக மீனவர் கோரிக்கை!

Wednesday, February 12, 2014
புதுக்கோட்டை::இந்தியாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, தமிழக மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்தில், தமிழக மீனவர்கள் மீதான, இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு
மீனவர்கள், சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
 
 தமிழக மீனவர்கள் மீதான, இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, சமூக தீர்வுகாண ஏற்பாடு செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழக மீனவர்கள், இந்திய கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன்பிடி தொழில் செய்வதை தவிர்க்க வேண்டும். மீன்வளத்தை பாதுகாக்கும் விதமாக, மீன்பிடி தொழிலுக்கு கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள், இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை, இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கவேண்டும்.
 
அதே போல், இந்தியாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை, மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment