Monday, February 24, 2014

தலைநகர முஸ்லிம்களுக்காக உயிரை துச்சமென மதித்து செயற்பட்டேன்: அமைச்சர் ரிசாட்!

Monday, February 24, 2014
இலங்கை::கொழும்பு மாவட்டத்தில் தமது கட்சி தேர்தலில் போட்டியிடு வதற்கு முக்கிய காரணம் இந்த மக்களின் அபிலாஷைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கே என்று அ. இ. ம. கா. தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
 
தலைநகரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளின் போது தான் உயிரையும் துச்சமென மதித்து அந்த இடத்திலேயே மக்களோடு மக்களாக நின்று பிரச்சினைகளை எதிர்நோக்கினேன்.
 
கிராண்ட்பாஸ் சம்பவத்தின் போது எமது கட்சி செயற்பட்ட விதம் இதற்குப் போதிய சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
நாம் அரசியலை நோக்கமாகக் கொண்டு கொழும்பு வாழ் மக்களுக்கு பணி புரியவில்லை. உண்மையான மக்கள் சேவகர்களாக நாம் இருந்தமையால்தான் எம்மைப் போட்டியிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தும் தனித்துப் போட்டியிடுகின்றோம் என கடந்த காலங்களில் சில முஸ்லிம் கட்சிகள் மார்தட்டின. இம்முறை தேர்தலில் அதனை நாம் தகர்த்தெறிந்துள்ளோம்.
நாம் அரசின் பங்காளிக் கட்சியாக இருந்த போதும் எம்மிடம் இரட்டை முகம் இல்லை. ஜனாதிபதியைக் கண்டால் ஒரு பேச்சு, மக்களைக் கண்டால் வேறொரு பேச்சு என்ற நிலைப்பாடு இல்லை- எனவு அமைச்சர் ரிசாத் குறிப்பிட்டார்.
 
இம்மாநாட்டில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், வேட்பாளர் கமால் முஸ்தபா ஆகியோரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

No comments:

Post a Comment