இலங்கை::எல்லை தாண்டி வந்து எமது நாட்டின் வடபகுதிக் கடற்பரப்பில் வடபகுதி மீனவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மீன்களைச் சூறையாடும் இந்திய மீனவர்கள் குறித்த பிரச்சினை இரு நாடுகளுக்குமிடையில் பற்றி எரியும் ஒரு சமகால அரசியல் சர்ச்சையாக உருவெடுத்திருக்கும் நிலையிலும் அது குறித்து மூச்சும் விடாது அரசியல் செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கு பலருக்கும் பலவிதமான சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
இந்திய மீனவர்கள் அதிலும் குறிப்பாக தமிழக மீனவர்களே இவ்வாறு இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்களைப் பிடித்து வருகின்றனர். இவர்கள் குறிப்பாக வடபகுதிக் கடற்பரப்பைக் குறிவைத்தே நமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடற்படையினர் பல தடவைகள் எல்லை கடந்து வரும் மீனவர்களைக் கைது செய்துள்ளபோதும் அவர்களது அத்துமீறல்கள் குறைந்தபாடாக இல்லை.
மாறாக தாம் தமது கடற்பரப்பினுள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் எமது கடற்படையினர் அவர்களை அத்துமீறிச் சென்று கைது செய்வதாகவும், துன்புறுத்துவதாகவும் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். உண்மையில் தமிழக மீனவர்களே எமது கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து தடை செய்யப்பட்ட றோலர் இயந்திரங்களைப் பயன்படுத்தி எமது கடல் வளத்தைச் சூறையாடி வருகின்றனர். கையும் களவுமாகப் பல தடவைகள் இவ்வாறு பிடிபட்ட போதும் இன்று வரை எமது கடற்படையினர் அவர்களைத் துன்புறுத்துவதாகவே பிரசாரம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் இப்போது இருதரப்பு மீனவ சமூகத்தினருக்குமிடையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி இதற்குத் தீர்வு காண இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த திங்கட்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதில் ஓரளவு சுமுகமான முடிவுகள் காணப்பட்டாலும் அடுத்த சுற்றில் இதனை விடவும் முன்னேற்றம் காணப்படும் எனும் நம்பிக்கை இருதரப்பினருக்கும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக நிலவி வந்த இப்பிரச்சினைக்கு இரு நாட்டு அரசாங்கங்களும் இவ்வாறு ஓர் தீர்வினைக் காண முன்வந்தமை பாராட்டத்தக்க விடயமே.
உண்மையில் இந்த இருநாட்டு மீனவர் சர்ச்சை தொடர்பாக இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாயே திறக்கவில்லை. தேவையற்ற விடயங்களுக்கெல்லாம் அறிக்கை விடும் இவர்கள் இவ்விடயத்தில் மெளனம் சாதித்து வருவது ஏன் எனும் கேள்வி பொதுவாக இப்போது எழுந்துள்ளது.
பாதிக்கப்படுவது தமக்கு வாக்களித்த ஒட்டுமொத்த வடபகுதி மீனவ சமூகமுமே என நன்கு தெரிந்திருந்தும் இவர்கள் இவ்விடயத்தில் எவ்விதமான அக்கறையும் செலுத்தவில்லை.
நாம் எல்லோரும் மேட்டுக் குடியினர், மீனவ சமூகம் கஷ்டப்பட்டால் எமக்கென்ன என்று இருந்து விடுபவர்கள் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். ஏனெனில் அரசாங்கத்தை வசை பாடக் காரணம் தேடுபவர்கள் இதனை அவ்வாறு நோக்கமாட்டார்கள்.
நிச்சயம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே இருப்பர். ஆனால் அத்தலைவர்களில் எவரும் இந்த தமிழக மீனவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வரவில்லை. இலங்கை மீனவர்கள் பற்றியும் அலட்டிக் கொள்ளவில்லை.
வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே பலமுறை குரல் கொடுத்தார். கச்சதீவு திருவிழாவில் அவர் கலந்து கொண்ட போது இந்திய மீனவர்கள் சிலருடன் அன்பாகப் பேசி அவர்கள் செய்துவரும் தவறினைச் சுட்டிக்காட்டினார். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. நிலைமை அத்துமீறிச் சென்ற ஒரு காலகட்டத்தில் ஐயாயிரம் மீனவப் படகுகளுடன் இந்தியா நோக்கிப் படையெடுப்பேன் எனவும் மிரட்டிப் பார்த்தார். அத்துடன் தன்னாலான முயற்சிகள் பலவற்றையும் செய்தார்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவருமே இவ்விடயத்தில் இன்றுவரை துளியளவும் அக்கறை காட்டவில்லை. இப்போது நடைபெற்றுவரும் இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளின் சந்திப்புக் குறித்துக் கூட ஓர் அறிக்கையும் விடவில்லை. ஒருவேளை தாம் தமிழக மீனவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் அங்கு தமக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம் எனும் பயம் இவர்கள் மனதில் இருக்கக் கூடும்.
தமிழகத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான சகல தலைவர்களுக்கும் வீடுகள் உள்ளன. அத்துடன் அவர்களில் முக்கியமான பலரது குடும்பங்கள் அங்கேயே இந்திய அரசாஙகத்தின் அனுசரணையுடன் வாழ்ந்தும் வருகின்றன. அவர்களில் பலரது பிள்ளைகள், சிலரது பேரப் பிள்ளைகள் அங்கேயே உயர் கல்வி கற்றும் வருகின்றனர். அதற்கும் இந்திய அரசே புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளது.
இந்திய மீனவர்களுக்கு எதிர்ப்பைக் காட்டினால் தமது இதுபோன்ற சலுகைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களினால் நிச்சயம் இடையூறுகள் ஏற்படுத்தப்படும் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும் இதனாலேயே தமது சொந்த மண்ணில் வாழ்க்கை நடத்தப் போராடும், தமக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைக்கும் அனுப்பிய சொந்த மக்கள் குறித்த அக்கறையில்லாது செயற்படுகின்றனர். இதனை விடவும் வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்திருந்தால் இப்பிரச்சினையை இலகுவாகத் தீர்த்திருக்கலாம். அதிலும் குறிப்பாக தமிழ்க் கூட்டமைப்பு வடமாகாண சபையைக் கைப்பற்றிய பின்னர் இருநாட்டு மத்திய அரசாங்கங்களின் பங்குபற்றுதல் இல்லாமலேயே தமிழக அரசுடன் பேசி ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கலாம். இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு அவ்வாறு செய்யாமல் பற்றி எரியும் இப்பிரச்சினையை மேலும் தொடரவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. இவ்வாறு தமிழக மீனவர்கள் அத்துமீறும் சந்தர்ப்பங்களில் அவர்களைக் கலைத்தும், கைது செய்தும் வரும் எமது கடற்படையினர் மீது பழியைப் போட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திவரும் இந்திய மீனவர்களது செயலுக்குத் துணைபோவதும் அவர்களது இன்னொரு நோக்கமாகவும் அமைந்துள்ளது.
இந்திய அரசிற்கு எமது அரசாங்கப் படைகள் மீது வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக இருநாட்டு இராஜதந்திர உறவுகளைச் சீர்குலைத்து இந்திய அரசாங்கத்தை இலங்கை மீது வெறுப்படைய வைப்பதுவும் இவர்களது திட்டமாகவுள்ளது.
எது எவ்வாறிருப்பினும் தற்போது நடைபெற்று வரும் இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளின் கலந்துரையாடலையாவது தமிழ்க் கூட்டமைப்பு குழப்பாமல் இருந்தால் அதுவே போதுமானது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் தமது அடுத்த தேர்தலை இலக்கு வைத்து தமது மீனவர்களுக்கு நன்மை செய்வதாக எண்ணி தீமை செய்து வருகின்றனர்.
இங்கு தமக்கு வாக்களித்த அப்பாவி மீனவர்களின் வாழ்க்கையுடன் தமிழ்க் கூட்டமைப்பு விளையாடி வருகிறது. தமிழ்க் கூட்டமைப்பின் கண்கள் இனியாவது இந்த அப்பாவி வடபகுதி மீனவர்கள் விடயத்தில் திறக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.


No comments:
Post a Comment