Friday, February 28, 2014

ஜி.எல்.பீரிஸ் தலைமையில் இலங்கைக்குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம்!

Friday, February 28, 2014
இலங்கை::25வது ஜெனீவா மனித உரிமை பேரவையில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு அடுத்தவாரம் முதற்பகுதியில் ஜெனீவா பயணமாகிறது. அதற்கு முன்னதாக ஜனாதிபதியுடன் ஆலோசனைகளை நடத்துவதற்கும் குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க 9ம் தேதி தான் அங்கு செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டார்.
 
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள பிரேரணைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவை பெறுவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் முதல் ஜெனீவாவில் இடம்பெற இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கூறியது.
 
இதேவேளை, ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு மார்ச் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை இடம்பெறுகிறது. இலங்கை தொடர்பான விவகாரம் 2ம் தேதி ஆராயப்படவிருப்பதாக மனித உரிமைப் பேரவை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை குழுவின் தலைவரான அமைச்சர் ஜி. எல் பீரிஸ் எதிர்வரும் 5ம் தேதி மனித உரிமை பேரவையில் உரையாற்ற இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
 
இலங்கை குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ள அங்கத்தவர்கள் குறித்து இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும், ஜனாதிபதியின் செயலாளர் வெளிநாட்டில் உள்ளதால் அவர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து தற்போதைக்கு கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
 
ஜெனீவா மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த குழு உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரசிங்க, இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் ஆதரவுகளைத் திரட்டுவதற்கான இறுதிச் சட்ட முன்னெடுப்புகள் இலங்கைக் குழுவினால் ஜெனீவா மாநாட்டின் போது பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படும் என்றார்.
 
கடந்த வருடத்தை விட இம்முறை இலங்கைக்கு கூடுதலான நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைக்குழு ஒருமித்த முயற்சியை எடுக்கும் எனவும், இதேவேளை இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டும் முயற்சிகளும் பரந்தளவில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment