Tuesday, February 18, 2014

உதயநிதி, அருள்நிதி "ஆப்சென்ட்' : அ.தி.மு.க.,வுக்கு பயந்து விட்டனரா?

Tuesday, February 18, 2014
சென்னை::கடந்த, 1949ம் ஆண்டு, தி.மு.க.,வை அண்ணாதுரை துவக்கிய போது, நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ராஜேந்திரன், கவிஞர் கண்ணதாசன் உட்பட, பலர் இணைந்தனர். இதன்பின், முதன் முதலாக, 1962ல் நடந்த சட்டசபை தேர்தலில், எஸ்.எஸ்.ராஜேந்திரன், தி.மு.க., சார்பில். சேடப்பட்டி தொகுதியிலும், 1967ல், எம்.ஜி.ஆர்., பரங்கிமலை தொகுதியிலும், போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

தி.மு.க., நிறுவன தலைவர் அண்ணாதுரை, தற்போதைய, தி.மு.க., தலைவராக வலம் வரும், கருணாநிதி ஆகியோர், திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதினர். தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள், தி.மு.க.,வில் ஆதிக்கம் செலுத்த துவங்கினர். குறிப்பாக, எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட நடிகர்களை நேரில் பார்க்க, மக்கள், தி.மு.க., பொதுக் கூட்டங்களுக்கு செல்ல துவங்கினர். இதனால், தமிழகத்தில், தி.மு.க., வேகமாக வளர துவங்கியது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி, "ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்திலும், கருணாநிதியின் மற்றொரு மகன் தமிழரசு. இவரது மகன் அருள்நிதி "வம்சம்' என்ற படத்திலும் அறிமுகமாகினர்.
 
தொடர்ந்து இருவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இருவரும், தி.மு.க., சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக, திருச்சியில் நடந்த, தி.மு.க., மாநாட்டில் உதயநிதியும், அருள்நிதியும் பங்கேற்கவில்லை. வழக்கமாக, தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்று வந்தார். ஆனால், நடிகரான பின், தி.மு.க., விழாக்களில், அவர் பங்கேற்பது இல்லை. இதற்கு, தான் தயாரிக்கும் அல்லது நடிக்கும் படங்களுக்கு, ஆளுங்கட்சி தரப்பில், ஏதாவது சிக்கல் வரும் என, உதயநிதி ஒதுங்கியுள்ளதாக தெரிகிறது. அருள்நிதிக்கும் இதே நிலை தான். கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வுக்காக, பிரசாரம் செய்த, சிரிப்பு நடிகர் வடிவேலுவின் நிலைமை தங்களுக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், உதயநிதியும், அருள் நிதியும் திருச்சியில் நடந்த, தி.மு.க., மாநாட்டில் பங்கேற்காமல் ஒதுங்கி விட்டதாக தெரிகிறது
தேர்தலின் போது பிரசாரத்துக்காக, நடிகர், நடிகைகளை ஆள்பிடிக்கும் வேலையில் இறங்கும், தி.மு.க., மேலிடம், உதயநிதி, அருள்நிதி ஆகியோரைக் கண்டு கொள்ளாதது ஏன், என்ற கேள்வி, தி.மு.க., தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment