Friday, February 28, 2014

ராஜீவ் கொலை வழக்கு: 4 பேர் விடுதலைக்கு இடைக்கால தடை!

Friday, February 28, 2014
புதுடெல்லி::ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 4 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 

மேலும், 4 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக விளக்கம் கோரி தமிழக அரசுக்கும், நளினி உள்பட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி, மாநில அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக அரசின் முடிவு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் விடுதலை முடிவை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

இதனைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 3 பேர் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் விடுவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிதாக
ஒரு மனு தாக்கல் செய்தது.

மத்திய அரசின் புதிய மனு மீதான விசாரணை  (பிப்ரவரி -27) நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி,  மத்திய அரசின் புதிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 4 பேரை, உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும் வரை விடுவிக்கக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் விசாரணை மார்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment