Monday, February 24, 2014

நளினி உள்பட 4 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு 27ம் தேதி விசாரணை!

Monday, February 24, 2014
புதுடெல்லி::ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி உள்பட நால்வரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் 27ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. ராஜீவ் கொலை குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என அறிவித்தது.

இதையடுத்து, இந்த மூவருடன் சேர்த்து ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்ஆகிய நால்வரையும் சிறையிலிருந்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்த காரணத்தால், 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசின் கருத்தை தெரிவிக்குமாறு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. 3 நாட்களுக்குள் பதில் கடிதம் கிடைக்கா விட்டால் 7 பேரையும், தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வோம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின்  விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வார இறுதியில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்து, தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூன்று பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு தடை விதித்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மற்ற நால்வர் விடுதலையை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி நளினி உள்பட நால்வர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில்  புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வரும் 27ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment