Friday, February 14, 2014
ராமேஸ்வரம்::தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க இன்று முதல் மார்ச் 10 வரை பாக்ஜலசந்தியில் மீன்பிடிப்பை தமிழக மீனவர்கள் நிறுத்தியுள்ளனர். இதனால் 20 ஆயிரம் தொழிலாளர்கள்
வேலையிழந்துள்ளனர்.தமிழகத்தில் இருந்து பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை தாக்குவது, சிறைப்பிடிப்பது, வலைகளை வெட்டுவது, மீன்பிடிச்சாதனங்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசுகள் இருநாட்டு மீனவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர். கடந்த ஜன.27 ல் தமிழகம் மற்றும் இலங்கை மீனவ பிரதிநிதிகளின் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில் இலங்கையில் நடக்கவுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் விசைப்படகு மீன்பிடிப்பை ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைக்க முன்வந்தனர்.
அதன்படி இன்று முதல் மார்ச் 10ம் தேதி வரை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டன. ராமேஸ்வரத்தில் நேற்று மீன்பிடித்து திரும்பிய அனைத்து படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.
பாக்ஜலசந்தி கடலில் விசைப்படகு மீன்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள 20 ஆயிரம் மீனவர்கள் தொழில் இழந்துள்ளனர். இதனிடையே பாக்ஜலசந்தி கடலில் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் இன்றுடன் 5வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்று திரும்புகின்றனர்.

No comments:
Post a Comment