Sunday, February 16, 2014

121 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா கடிதம்!

 Sunday, February 16, 2014
சென்னை::இலங்கை சிறையில் வாடும் 121 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வற்கு தூதரகம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி இருக்கிறார்..அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு  அவர் எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.  
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று  எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  
 
கடந்த 13_ம் தேதி அதிகாலையில் தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ள மற்றொரு சம்பவம் குறித்து தங்களின் கவனத்திற்கு வேதனை யோடு கொண்டு வருகிறேன்.  
கடற்கரையோர மாவட்டங்களில் வசிக்கும் தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தியில் அவர்களின் ஜீவாதார வாழ்க்கையான மீன் பிடிப்பதற்கு செல்வதையே முற்றிலும் தடுக்கும் வகையில் இலங்கை கடற்படை தற்போது முழுவீச்சில் செயல்படுகிறது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது அவர்கள் தாக்குதல், சித்ரவதை மற்றும் கைது, சிறை போன்ற ஆபத்துக்களை சந்திக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  
இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் இரு நாடுகளின் ஆதரவோடு சென்னையில் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களின் ஜீவாதார வாழ்க்கை பிரச்சனையை பரஸ்வர புரிந்துணர்வு மூலம் தீர்வு காணுவ தற்கு ஆக்கப்பூர்வமான நிலை உருவான நிலையில் இலங்கை கடற்படை அதனை சீர்குலைக்கும் வகையில் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பது வேதனைக்குரியது ஆகும். 
கடந்த 13_ம் தேதி ராமநாதபுரம், மண்டபம் மற்றும் ஜெகதாமபட்டினம் ஆகிய இடங்களை சேர்ந்த 29 மீனவர்கள் 7 இயந்திர படகுகளில் பாக்ஜலசந்தியில் மீன் பிடிக்கச் செல்லும்போது கைது செய்யப்பட்டு அவர்கள் கயிட்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 24_ந் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 5 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும், அவர்களு டைய ஜீவாதார மீன்பிடி தொழிலும் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்டுள்ளதை நான் எனது முந்தைய கடிதங்களில் தெளிவாக தெரிவித்து இருக்கிறேன். 
இதற்கு இந்திய அரசு 1974 மற்றும் 76ம் ஆண்டுகளில் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் தான் முக்கிய காரணம்.இந்த ஒப்பந்தங்கள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறித்தது மட்டுமல்ல கச்சத்தீவை  இந்திய இறையாண்மையிலிருந்து  பறித்துள்ளது.
மத்திய அரசு லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பொருட்டாக கருதவில்லை.  இலங்கை கடற்படை சட்ட விரோதமாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதலையும்  சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைப்பதையும் தடுக்கும் வகையில் மத்திய அரசு தூதரகம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. 
எனவே தாங்கள் இப்பிரச்சனையில் உடனே தலையிட்டு இலங்கை அரசிடம் அதனை எடுத்துச் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 121 மீனவர்களையும் அவர்களது 26 படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 
தாங்கள் தனிப்பட்ட முறையில் இதில் தலையிட்டு உயர்மட்ட தூதரக அளவில் பிரச்சனையை எடுத்துச் சென்று 121 மீனவர்களையும், அவர்களின் 26 படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment