Wednesday, January 8, 2014

யாழில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண நிலைமைகள்: மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரடி ஆய்வு!

Wednesday, January 08, 2014
இலங்கை::யாழில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து நகரின் கடற்கரையோரங்களில் குடியிருக்கின்ற மக்களின் பாதுகாப்பு தொடர்பாக மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல்வேறு தரப்பினர்களும் கடற்கரைக்கு விஜயம் மேற்கொண்டு நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இயற்கை அனர்த்தங்களின்போது, கடற்கரையோரத்தில் குடியமர்ந்திருக்கின்ற மக்களுடைய பாதுகாப்புக்கள் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பாகவும், இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற இயற்கை அனர்த்தங்களைத் தொடர்ந்து மாவட்டத்தின் நகர கடற்கரையோரப் பிரதேசங்களிற்கு, மாவட்டத்தின் பல்வேறு துறைசார்ந்த தரப்பினர்களும் நேற்று மாலை நேரடியாக விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்தக் குழுவில் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், மாநகர ஆணையாளர், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் உள்ளிட்ட பல தரப்பினரும் சென்றிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக மாநகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரையோரப் பிரதேசஙத்திற்கு விஜயம் மேற்கொண்டு, கடற்கரையோரத்தின் நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளதுடன், இதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளதுடன், சில நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அனர்த்தங்களின் போது கடற்கரைப் பிரதேசங்களிலிருக்கின்ற மக்களைப் பாதுகாப்பது மற்றும் கடற்கரைப் பிரதேசங்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய அனர்த்தப் பாதுகாப்பு தொடர்பாக கரையோர மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, சுகாதாரத் துறையை பாதுகாத்து மேம்படுத்துவதற்காக கடற்கரைப் பிரதேசங்களில் குப்பை தொட்டிகளை அமைப்பதற்கும், மேலதிகமான தேவைகளுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து மாடிக் கட்டிடத் தொகுதியின் புனரமைப்பு வேலைகள் தொடர்பாகவும் பார்வையிட்டனர். அதாவது, இந்தக் கட்டிட புனரமைப்புத் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதனைத் தொடர்ந்து இதன் புனரமைப்புக்கள் தொடர்பாக அறிக்கை தருமாறும் அமைச்சர் கோரியுள்ளார்.

இதனால் கட்டிடத்தின் நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், கட்டிடத்தின் புனரமைப்புக்கான குழுவொன்றையும் நியமித்துள்ளதாகவும், இதனூகடாக மக்கள் நலன்சார்ந்நத வகையில், சுமுகமான வகையில் இத்தகைய புனரமைப்பு வேலைகளைச் செய்து முடிக்கலாமென்றும் முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment