Friday, January 17, 2014

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற புதுடில்லி பேச்சுவார்த்தை வெற்றி!

Friday, January 17, 2014
இலங்கை::இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற புதுடில்லி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட குழு நேற்று முதல் தடவையாகக் கூடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
 
இந்தக் குழுவின் அடுத்த பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெறவுள்ளது. இரு நாட்டு மீனவர்களும் சர்வதேச கடல் எல்லையை மீறுவதை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் ஊடகச் செயலாளர் நரேந்திர ராஜபக்ஷ  தெரிவித்தார்.
 
சர்வதேச எல்லையை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மீனவர்கள் கைதுசெய்யப்படும் போது அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தும் இருநாட்டுப் பிரதிநிதிகளும் இப்பேச்சுவார்த்தையின்போது ஆராய்ந்துள்ளனர். புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களையும் நேற்றுமுதல் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கும், இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
 
இதற்கமைய கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் ஹெட்டியாராச்சி தலைமையில், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் ஆலோசகர் டொக்டர் எஸ்.சுபசிங்க, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத் ஆகிய மூவர் இலங்கை சார்பில் நியமிக்கப்பட்டனர். அதேநேரம், இந்தியா சார்பில் வேளாண்மைத் துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
 
இந்தக் குழு நேற்று புதுடில்லியில் முதல் தடவையாகக் கூடி ஆராய்ந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளி த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டதுக்கமைய இரு தரப்பிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த தலா 52 மீனவர்கள் நேற்று பரிமாற்றப்பட்டனர். காங்கேசன்துறைக்கு அண்மித்த சர்வதேச கடல் எல்லையில் இந்த மீனவர்கள் பரிமாற்றம் இடம்பெற்றது.
நேற்றுப் பிற்பகல் 1 மணிக்கு இந்தப் பரிமாற்றம் இடம்பெற்றதாக கடற்படைப்
 
பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கடற்படையின் ‘சக்தி’ கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட 52 இந்திய மீனவர்களையும் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரிடம் கையளித்ததுடன், அவர்கள் அழைத்து வந்த இலங்கை மீனவர்கள் 52 பேரும் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை நேற்றுமுதல் கட்டம் கட்டமாக விடுதலை செய்வதற்கு அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கும், இந்திய மத்திய அமைச்சர் சரத்பவாருக்கும் இடையில் டில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டது.
 
இதற்கமைய நேற்றையதினம் முதற்கட்டமாக இரு தரப்பிலும் தலா 52 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 52 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். படகுகள் எதுவும் கையளிக்கப்படவில்லையென கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
 
இந்தியாவில் தடுத்து வைக்கப் பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 52 பேரும் நேற்றுமுன்தினம் பொலிஸாரால், கடலோரப் பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
 
தமிழ் நாட்டில் 181 இலங்கை மீனவர்களும், அவர்களின் 34 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், ஆந்திர மாநிலத்தில் 31 மீனவர்களும் 6 படகுகளும் தடுத்து வைக்கப் பட்டுள்ளன.
 
அதேநேரம், 260 இந்திய மீனவர்களும் அவர்களுக்குச் சொந்தமான 77 படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்விதமிருக்க புதுடில்லி சென்றிருந்த கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று இரவு 9.30 மணிக்கு நாடு திரும்பினார்.
 
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுடில்லி சென்றிருந்த, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, அந்நாட்டு மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சரத் பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

No comments:

Post a Comment