Friday, January 31, 2014

சரத் ஃபொன்சேகா இன்று சர்வதேசத்தின் கைப்பொம்மை: ஜனாதிபதியின் இணைப்பாளர் கலகம தம்பவன்ச தேரர் குற்றச்சாட்டு!

Friday, January 31, 2014
இலங்கை::கைப்பொம்மையாகிவிட்ட சரத் ஃபொன்சேகா ஜனாதிபதியின் யுத்த வெற்றியைச் சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதியின் மத அலுவல்கள் பிரிவின் பௌத்த மதத்திற்குப் பொறுப்பான கலகம தம்பவன்ச தேரர் குற்றம்சாட்டினார்.

கொழும்பு பொதுநூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்த கலகம தம்பவன்ச தேரர் மேலும் கூறுகையில்,
 
இன்று சரத் ஃபொன்சேகா சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய மேற்குலக நாடுகளின் கைப்பொம்மையாகச் செயற்பட்டு வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் பெற்றுக்கொண்ட யுத்த வெற்றியை சிதைக்கும் வகையில் சரத் ஃபொன்சேகா செயற்பட்டு வருகிறார்.
 
இன்னும் இரு மாதங்களில் இரு மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த தேர்தலில் ஆளும் தரப்பினை வெற்றியடைச் செய்து சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு இலங்கையர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
 
வட மாகாண சபையைப் போன்று சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமையச் செயற்படும் மாகாண சபையொன்று மேல் மற்றும் தென் மாகாணத்தில் அமைந்துவிடக்கூடாது. வட மாகாண சபைத் தேர்தலை ஆளும் தரப்பு நினைத்திருந்தால் வென்றிருக்க முடியும்.
 
ஆனால், மக்களின் ஜனநாயகத்தை உறுதிசெய்யும் வகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீதியும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தினார். ஆனால், இன்று வட மாகாண சபை நாட்டைக் காட்டிக்கொடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது.
 
வட மாகாண சபை உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் இவ்வினவாத நடவடிக்கையால் இலங்கையை மீண்டும் இருளுக்குள் தள்ளிவிட வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment